விடிய விடிய கனமழை வெளுத்து வாங்கி வருவதால் வெள்ளக்காடாக மாறிய சென்னை மாநகர்...

விடிய விடிய கனமழை வெளுத்து வாங்கி வருவதால் சென்னை மாநகர் முழுவதுமே வெள்ளக்காடாக மாறியுள்ளது.. 

விடிய விடிய கனமழை வெளுத்து வாங்கி வருவதால் வெள்ளக்காடாக மாறிய சென்னை மாநகர்...

வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்ததையடுத்து, தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் கடந்த சில தினங்களாகவே லேசான சாரல் மழை தலைகாட்டி வந்தது. இந்நிலையில், நேற்றிரவு சென்னையில் திடீரென கனமழை பெய்ய தொடங்கியது. இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கிய மழை, இடைவெளியின்றி தற்போது வரையிலும் பெய்து வருகிறது. இதனால் சென்னையின் பெரும்பாலான இடங்களில் தாழ்வான பகுதிகளை மழைநீர் சூழ்ந்துள்ளது.

மேலும் சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் சாலைகளே கண்ணுக்கு தெரியாத அளவில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. வாகனங்களும் தண்ணீரில் மிதக்கின்றன.இந்நிலையில், திருவல்லிக்கேணி ராஜா ஹனுமந்த லாலா தெருவில் மழை நீருடன் சாக்கடை கழிவும் கலந்துள்ளதால், அப்பகுதி முழுவதும் கருநிற நீரால் சூழப்பட்டு, சுகாதாரமற்ற நிலை உருவாகியுள்ளது.

இதேபோன்று சென்னை வேளச்சேரி ஐந்து பார்லாங்கு சாலையில்  முழங்காலுக்கு மேல் தண்ணீர் தேங்கி நிற்பதால், வேளச்சேரியில் இருந்து கிண்டி வழியாக செல்லக்கூடிய பேருந்துகள் வேறு வழியில் மாற்றம் செய்யபட்டுள்ளன.சென்னை வியாசர்பாடி, புளியந்தோப்பு உள்ளிட்ட பல பகுதிகளில்  மழைநீர் சாலைகளில் குளம் போல் தேங்கி நிற்பதால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில், ராட்சத மோட்டார்கள் மூலம் தண்ணீரை வெளியே எடுக்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது