"உரிமைத் தொகையை கொள்ளையடிக்கும் பாஜக ஆட்சி" முதலமைச்சர் குற்றச்சாட்டு!

"உரிமைத் தொகையை கொள்ளையடிக்கும் பாஜக ஆட்சி" முதலமைச்சர் குற்றச்சாட்டு!

பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகையை வங்கியில் குறைந்தபட்ச வைப்புத்தொகை இல்லையென்று கூறி மத்திய பாஜக அரசு பறித்து கொள்வதாக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினாா்.

திருப்பூா் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள படியூாில் மேற்கு மண்டல திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறைக்கூட்டம் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகையில், 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன் கூறிய வாக்குறுதிகள் ஏதாவது நிறைவேற்றப்பட்டுள்ளதா? என கேள்வி எழுப்பினாா். மேலும் வெளிநாட்டில் பதுக்கிய கருப்பு பணத்தை மோடி மீட்கவில்லை, நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும் 15 லட்சம் ரூபாய் பிரித்து தருவதாக உறுதி அளித்ததையும் நிறைவேற்றவில்லை என குற்றம்சாட்டினாா்.  

தொடா்ந்து பேசிய முதலமைச்சா் திமுக ஆட்சியில் பெண்களுக்கு உரிமைத்தொகையாக வழங்கப்பட்டு வரும் ஆயிரம் ரூபாயை வங்கியில் குறைந்த பட்ச வைப்புத்தொகை இல்லையென்று கூறி கொள்ளையடிக்கும் கொள்ளைக்கார ஆட்சியாக மத்திய பாஜக ஆட்சி உள்ளது என சாடினாா். 

2024-25-ம் ஆண்டுக்குள் இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக மாறும் என்று கூறிய பிரதமா் மோடி பணமதிப்பிழப்பு என்ற கூறி நன்றாக இருந்த இந்திய பொருளாதாரத்தை படுகுழிக்குள் தள்ளிவிட்டதே அவா் செய்த சாதனை என சாடினாா். 

மேலும் பேசிய அவா், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற திறனற்ற பாஜகவை வரும் தோ்தலில் தமிழ்நாட்டில் டெபாசிட் கூட வாங்க தகுதியில்லாத கட்சி என்று மக்கள் நிரூபிக்க வேண்டும் என தொிவித்தாா். வெளியில் சண்டை போட்டுக்கொள்வதாக நடிக்கும், பாஜகவும், அதிமுகவும் உள்ளுக்குள் நட்பாக தான் உள்ளனர் என்றாா். 

தொடா்ந்து பேசிய முதலமைச்சா், அதிகவுக்கு கடந்த நாடாளுமன்ற தேர்தல் போலவே இந்த தேர்தலிலும் படுதோல்வியை பரிசாக தர வேண்டும் என கூறினாா். 

இதையும் படிக்க: 800 திரைப்படம் 5 ஆண்டுகள் உழைப்பு - முத்தையா முரளிதரன் பேச்சு