" செஞ்சி மக்களின் 40 ஆண்டு கனவு..." - அமைச்சர் செஞ்சி மஸ்தான்

செஞ்சி பகுதி மக்களின் 40 ஆண்டு கனவான அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல் நாள் வகுப்பினை அமைச்சர் செஞ்சி மஸ்தான் மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்கி தொடங்கி வைத்தார்

" செஞ்சி மக்களின் 40 ஆண்டு கனவு..." - அமைச்சர் செஞ்சி மஸ்தான்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதி மக்களின் 40 ஆண்டு கால கோரிக்கையை ஏற்று, கடந்த ஜூலை 7ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக செஞ்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து செஞ்சி அரசு கலைக் கல்லூரிகயில் பி.ஏ தமிழ், பி.ஏ ஆங்கிலம், பி.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ், பி. ஏ எக்கனாமிக்ஸ் மற்றும் பி.பி.ஏ பாடப்பிரிவுகளுக்கு 240 மாணவர் சேர்க்கைக்கான பணிகள் தொடங்கி, முடிவுற்ற நிலையில் நேற்று, முதல் நாள் வகுப்புகள் தொடங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து புத்தகங்களை வழங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல் நாள் வகுப்புகளை தொடங்கி வைத்தார்.

அப்போது பேசிய அமைச்சர் செஞ்சி மஸ்தான், செஞ்சி பகுதி மக்களின் 40 ஆண்டுகள் கோரிக்கைகளை தேர்தல் வாக்குறுதியாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களை சந்தித்து வழங்கிய நிலையில், திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் செஞ்சி பகுதி மக்களின் 40 ஆண்டு கால கனவை நிறைவேற்றும் வகையில் செஞ்சி பகுதிக்கு அரசு கலைக் கல்லூரியை முதலமைச்சர் வழங்கியுள்ளார். அவருக்கு செஞ்சி தொகுதி மக்களின் சார்பாக நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மஸ்தான், அனைத்து மக்களுக்கும், அனைத்தும் கிடைக்கும் வகையில் பின்தங்கிய பகுதியான செஞ்சி பகுதிக்கும் கலைக் கல்லூரியை கொண்டு வந்த திராவிட மாடல் ஆட்சி என்றும் தமிழக முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும், விரைவில் செஞ்சி கலைக் கல்லூரிக்கு கட்டிடம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டு அடுத்த ஆண்டுக்குள் முடிவடையும் என்றும் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் செஞ்சி டவுன் சேர்மன் மொக்த்தியார் மஸ்தான், செஞ்சி ஒன்றிய சேர்மன் விஜயகுமார், அரசு கலைக்கல்லூரி முதல்வர் டாக்டர் ரவிசங்கர், கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.