அதானி துறைமுகம் விரிவாக்கம்: தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கருத்துகேட்பு கூட்டத்திற்கு அழைப்பு!!

அதானி துறைமுகம் விரிவாக்கம்: தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கருத்துகேட்பு கூட்டத்திற்கு அழைப்பு!!

சென்னையில் புறநகர் பகுதியில் செயல்பட்டு வரும் அதானி துறைமுகத்தை விரிவாக்கும் பணிகள் குறித்து கருத்துக் கேட்பு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு விடுத்துள்ளது.

சென்னை அருகே திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள காட்டுப்பள்ளியில் 330 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்திருக்கும் அதானி துறைமுகத்தை 2012ம் ஆண்டிலிருந்து எல்&டி நிறுவனம் இயக்கி வந்தது. தற்போது தொழில் வளர்ச்சியை அதிகரிக்கும் வகையில் துறைமுகத்தை 6 ஆயிரத்து 111 ஏக்கருக்கு விரிவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பினர் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், விரிவாக்கப் பணிகள் குறித்த மக்களின் குறை நிறைகளை தெரிந்துக்கொள்வதற்காக அடுத்த மாதம் 5-ம் தேதி கருத்துகேட்பு கூட்டம் நடத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் செய்தித்தாளில் விளம்பரம் ஒன்ற் வெளியிட்டுள்ளது.

இது சுற்றுச்சூழல் அமைப்பினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருந்தாலும், இந்தக் கருத்துக் கேட்பு கூட்டத்தில் பல்வேறு உறுதிகளை அரசு தரப்பு அளிக்க வேண்டும் என்று அவ்வமைப்பினர் எதிர்பார்க்கின்றனர். அதாவது, அதானி துறைமுக விரிவாக்கத்தால், கடல் அரிப்பு ஏற்படாது, மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாது, வெள்ள அபாயம் ஏற்படாது, மீனவர்கள் இடம்பெயர வேண்டிய அவசியம் இருக்காது என்பதான உறுதிகள் அளிக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றன. மேலும், தொழில்துறை வளர்ச்சிக்கும் அயல்நாட்டு முதலீட்டை ஈர்க்கும் விதத்திலும் செயல்பட்டு, மீனவர்களுக்கான வேலை வாய்ப்பு பெருக்கப்படும் என்ற உறுதியும் எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றை அரசு தரப்பு வழங்கும் பட்சத்தில் துறைமுக விரிவாக்கம் தமிழ்நாட்டிற்கு மிகுந்த பயனளிக்கும் என்று நம்பப்படுகிறது.  

இன்னொருபுறம், அப்பகுதி மக்கள் சார்பிலும் கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. துறைமுக விரிவாக்கத்தின் மூலம் நிரந்தர வேலைவாய்ப்பு ஏற்படுத்தித்தர வேண்டும், கடல் அரிப்பைத் தடுக்கும் வகையில் அப்பகுதியில் தூண்டில் வளைவு அமைத்துத் தர வேண்டும் உள்ளிட்டவை மக்களின் கோரிக்கையாக இருக்கின்றன.

இந்த மக்களுக்கு 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்பு, 53 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டிற்கு வாய்ப்பு, நாட்டின் மிகப்பெரிய துறைமுகமாக உயர்த்த திட்டம், ஏற்றுமதியை ஊக்குவிக்கும் மையமாக தமிழ்நாட்டை உயர்த்துதல் உள்ளிட்டவை இந்த விரிவாக்கத்தின் பயன்களாக காட்டப்படுகின்றன.

ஏற்கனவே, வட சென்னையை வளமாக்கவுள்ள துறைமுகத்தின் மீது மக்களின் எதிர்ப்பு குறைந்துள்ளது. துறைமுகத்தை வரவிடாமல் தடுப்பதைவிட அதன்மூலம் தங்களுடைய பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்ள மக்களும் முன் வருகின்றனர். கருத்து கேட்பு கூட்டத்தில் பங்கேற்பது குறித்து, மக்கள் தொகை அதிகம் கொண்ட அரங்கன்குப்பம், கூனங்குப்பம் மற்றும் சாத்தன்குப்பம் ஆகிய பகுதியைச் சேர்ந்த மக்களின் கருத்தே அதானி துறைமுகத்தின் அடுத்தகட்டத்தை தெளிவாக்கும் என்பதே நிதர்சனம்.

இதையும் படிக்க || ''மூடப்பட்ட 174 செங்கல் சூளைகள் விரைவில் திறக்கப்படும்'' அமைச்சர் மெய்யநாதன்!!