"ஆட்சி மாற்றம் ஏற்பட, மாணவர்கள் களத்தில் இறங்க வேண்டும்" டி.டி.வி. தினகரன்!!

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட மாணவ சமுதாயமும் மற்றும் இளைய சமுதாயமும் அரசியலில் பங்கேற்க வேண்டுமென அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார். 

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாணவ மாணவியர் அணி சார்பில் 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவியர்கள் கட்சியில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி டிவி தினகரன் கலந்து கொண்டு கல்லூரி மாணவர்களுக்கு கட்சியின் அடையாள அட்டை வழங்கினார். 

அதைத் தொடர்ந்து தொண்டர்களிடையே உரையாற்றிய டிடிவி தினகரன், "மாணவர்கள் இயக்கத்தில் இணைய முன் வந்திருப்பது மகிழ்ச்சியை தருகிறது. தமிழகம் மட்டுமல்ல உலகத்தின் எந்த நாட்டிலும் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் பெரும்பாலும் மாணவர்களை இயக்கத்தில் சேர்த்து தான் வெற்றி பெற்றிருப்பார்கள். மாணவர்கள் நடத்திய பல்வேறு போராட்டங்கள் வெற்றி பெற்றுள்ளது. வியட்நாம் போராட்டம் சீனா, ரஷ்யா புரட்சிகளும் இளைய சமுதாயத்தினரால் தால் தொடங்கப்பட்டது.
மொழிப் போரில் மையப்புள்ளியாக செயல்பட்டவர்கள் மாணவர்கள் தான் எம் ஜி ஆர் போல ஜெயலலிதா மாணவர்களுக்கு பல்வேறு திட்டங்காள செயல்படுத்தினார். உள்ளாட்சி மன்றத்தில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்தியவர் ஜெயலலிதா தான். அவரை தொடர்ந்து தான் பாராளுமன்றத்தில் 33 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டுள்ளது" எனப் பேசியுள்ளார்.

மேலும், "சமுதாய, அரசியல் மாற்றம் மாணவர்களிடம் இருந்து தொடங்க வேண்டும். பழனிச்சாமி செய்த தவறால் தி மு க இன்று ஆட்சிப் பொறுப்பில் உள்ளார்கள். மாணவர்களை ஏமாற்றி தான் திமுக ஆட்சியில் அமர்ந்துள்ளது. நீட் தேர்வு, கல்விக்கடன்  ரத்து என பல்வேறு திட்டங்களை அமல்படுத்தாமல் இளைய சமுதாயத்தை ஏமாற்றி உள்ளார்கள். இளைய சமுதாயத்தினரை ஏமாற்றிய இவர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டுமானால் ஆட்சி மாற்றம் நிகழ வேண்டும். அதற்காக மாணவ சமுதாயம் பாடுபட வேண்டும்" என பேசினார்.