"காவிரி விவகாரத்தில் வாய் திறக்காமல் இருக்கும் தமிழ் நடிகர்களின் படங்களை புறக்கணியுங்கள்" விவசாயிகள் வேண்டுகோள்!!

தமிழ்நாட்டிற்கு தண்ணீர் கொடுக்காத கர்நாடகாவிற்கு என்.எல்.சியிலிருந்து மின்சாரம் கொடுக்க வேண்டாம் என கடலூர் விவசாய சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

கர்நாடக மாநிலம் தமிழகத்திற்கு தரவேண்டிய நீரை தர வேண்டும் என தமிழக முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் பலகட்ட போராட்டங்களில் நடத்தி வரும் நிலையில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜை சந்தித்து விவசாய முன்னேற்ற கழகம் சார்பில் கடலூர் மாவட்ட விவசாயிகள்  மனு அளித்தனர்.

அம்மனுவில், உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி கர்நாடகா, தமிழகத்துக்கு 53.77 டி எம்சி தண்ணீர் தர வேண்டியுள்ளது. ஆனால் இதுவரை 15.79 டி. எம்.சி. மட்டுமே கர்நாடகா வழங்கியுள்ளது. போதிய நீர் இருந்தும், தண்ணீரை திறந்து விட மறுப்பதால் காவிரி டெல்டாவில் பயிர்கள் நாசமாகி வருகின்றன எனக் கவலைத் தெரிவித்துள்ளனர்.

மேலும், காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்று குழு மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தி தமிழகத்திற்கு தினசரி தர வேண்டிய 3000 கன அடி தண்ணீரை தர மறுக்கும் கர்நாடக அரசுக்கு தமிழகத்தின் கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சியிலிருந்து உற்பத்தியாகும் மின்சாரம் வழங்குவதை நிறுத்த வேண்டும் என விவசாயிகள் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம்  பேசிய விவசாயிகள் கர்நாடக மாநில அரசுக்கு ஆதரவாக அங்குள்ள நடிகர்கள் உள்ள நிலையில் காவிரி விவகாரத்தில் தமிழகத்தில் வாய் திறக்காமல் உள்ள நடிகர்களின் படங்களை புறக்கணிக்க வேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.