பார்வையற்ற ஆசிரியரை கேலி கிண்டல் செய்து வீடியோ எடுத்து வலைதளத்தில் பரப்பிய 3 மாணவர்கள் பள்ளியில் இருந்து நீக்கம்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பார்வையற்ற ஆசிரியரை கேலி கிண்டல் செய்து, அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட 3 மாணவர்கள் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

பார்வையற்ற ஆசிரியரை கேலி கிண்டல் செய்து வீடியோ எடுத்து வலைதளத்தில் பரப்பிய 3 மாணவர்கள் பள்ளியில் இருந்து நீக்கம்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருயுள்ள  புதுசத்திரம்  அரசுப்பள்ளியில் பார்வையற்ற ஆசிரியராக பன்னீர் என்பவர் பணி புரிந்து வருகிறார். 9 ஆம் வகுப்பிற்கு வரலாற்று பாடம் நடத்த வந்த பார்வையற்ற ஆசிரியரான பன்னீரை, மாணவர்கள் கேலியும், கிண்டலும் செய்து பாடத்தை கவனிக்காமல் ஆசிரியர் முன் எழுந்து நின்று  ஆட்டம் போட்டனர். அதுமட்டுமல்லாது அதனை செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பரப்பியுள்ளனர்.

வகுப்பறையில் மட்டுமல்லாது பள்ளிக்கு வெளியிலும் செல்லும் போது, பார்வை குறைபாடுள்ள ஆசிரியர் பன்னீரை இதைவிட மோசமாக நடத்துவதாகவும் சொல்லப்படுகிறது. இது தொடர்பாக அப்பள்ளி தலைமையாசிரியரிடம் கேட்டபோது, சம்மந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களை வரவழைத்து கண்டிப்பதாக தெரிவித்தார்.

இந்நிலையில்,பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஆசிரியரை கேலி செய்து வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட 3 மாணவர்கள் பள்ளியில் இருந்து நீக்கம் செய்வதாக  தலைமையாசிரியர் குணசேகரன் அறிவித்துள்ளார் இச்சம்பவம் புதுசத்திரம் பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..