காஞ்சிபுரத்தில் பல்வேறு கோவில்களில் வசந்த விழா.. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் நடைபெற்ற வசந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

காஞ்சிபுரத்தில் பல்வேறு கோவில்களில் வசந்த விழா..  திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்!!

திம்மசமுத்திரம் பகுதியில் உள்ள திரௌபதி அம்மன் கோவிலில் அக்னி வசந்த தீமிதி விழாவையொட்டி பாரதம் மகா பாரதம் சொற்பொழிவு நடத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக பீமன்-துரியோதனன் படுகள உற்சவம் வெகு விமரிசையாக  நடைபெற்றது. இதற்காக பிரம்மாண்ட துரியோதனன் சிலை அமைக்கப்பட்டு கட்டைக் கூத்துக் கலைஞர்களால் பீமன்-துரியோதனன் போர்க்களக் காட்சி நடத்தப்பட்டது.

இதேபோல் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வசந்த உற்சவம் தொடங்கியதையடுத்து வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி பூதேவியுடன் வசந்த மண்டபத்தில் பக்தர்களுக்கு எழுந்தருளினார்.

உற்சவத்தின் முதல் நாளான இன்று வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு அம்பாள்களுடன் சன்னதி வீதியில் உள்ள திருவடி கோவில் வரை வீதி உலா வந்தார். திரளான பக்தர்கள் பெருமாளை தரிசனம் செய்து வழிபட்டனர்.

காஞ்சிபுரம் பஞ்சுபேட்டை பகுதியிலுள்ள திரௌபதி அம்மன் கோவிலில் வசந்த தீமிதி திருவிழா நிறைவு நாளான இன்று பால்குடம் நிகழ்ச்சி நடைபெற்றது.  இதில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கச்சபேஷ்வரர் கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து குமரகோட்டம் முருகன் கோவில், ஏகாம்பரநாதர் கோவில் வழியாக திரௌபதி அம்மன் கோவிலை வந்தடைந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர்.