முதலில் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி... பிறகே கலைஞர்  நூலகத்திற்கு அடிக்கல்...

மதுரையில் அமையவுள்ள கலைஞர் நினைவு நூலகத்திற்கு தேர்வு செய்யப்பட்ட இடம் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகளால், ஜனாதிபதி இன்று அதற்கு அடிக்கல் நாட்ட மாட்டார் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

முதலில் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி... பிறகே கலைஞர்  நூலகத்திற்கு அடிக்கல்...

மதுரையில் 70 கோடி ரூபாய் மதிப்பில் 2 லட்சம் சதுர அடி பரப்பளவில் 8 மாடி கட்டிடத்துடன் கலைஞர் நினைவு நூலகம் கட்ட மதுரை - நத்தம் சாலையில் உள்ள பொதுப்பணித்துறை, நீர்வள ஆதாரத்துறைக்கு சொந்தமான இடம் தேர்வு செய்யப்பட்டது.

அந்த இடத்தில் உள்ள அரசு குடியிருப்பில் பெரியாறு அணையை கட்டிய கர்னல் பென்னி குக் வாழ்ந்துள்ளார் என்றும், அதனை இடிக்க கூடாது என்றும் பெரியாறு - வைகை ஆயக்கட்டு பாசன விவசாயிகள் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்தது. அதனை தொடர்ந்து அதிமுக, பாமக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த விவகாரம் குறித்து பொதுப்பணித்துறை அமைச்சர் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் ஆகியோர் விளக்கம் அளித்துள்ளனர். 

கர்னல் பென்னி குக் இறந்த பின்னரே அந்த கட்டிடம் கட்டப்பட்டு உள்ளதாகவும், எனவே அவர் அங்கு வாழ்ந்ததற்கான சாத்தியங்கள் இல்லை எனவும் விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டது.

கலைஞர் நினைவு நூலக விவகாரத்தில் எந்தவித சிக்கலும் ஏற்பட்டு விடக்கூடாது எனும் நோக்கில் தான், ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட 7 இடங்களும் நிராகரிக்கப்பட்டு, தற்போது பொதுப்பணித்துறை வசமுள்ள இந்த இடம் தேர்வு செய்யப்பட்ட நிலையில், இதிலும் சர்ச்சைகள் எழுந்துள்ளதால் அரசு குழப்பத்தில் உள்ளது.

சட்டபேரவை நூற்றாண்டு விழா மற்றும் கலைஞர் பட திறப்பு விழாவில் பங்கேற்க இன்று தமிழகம் வரும் ஜனாதிபதி, மதுரையில் அமையவுள்ள கலைஞர் நூலகத்திற்கும் அடிக்கல் நாட்டுவார் என அதிகாரிகள் கூறிவந்த நிலையில், இட சர்ச்சை காரணமாக இன்று அதற்கான அடிக்கல் நாட்டப்படாது என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இட சர்ச்சைக்கு உரிய தெளிவு பெற்று முற்றுப்புள்ளி வைத்த பின்னரே, அடிக்கல் நாட்டி பணிகள் துவங்கும் எனவும் அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர்.