"மகளிர் நலனுக்காக என்ன செய்தது திமுக?" - சீமான்!

மகளிர் உரிமைத் தொகை குறித்து தொடர்ந்து பேசும் திமுக,  மகளிர் நலனுக்காக என்ன செய்தது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

திருச்சி விமான நிலையத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு மதிமுக - நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் இடையே எழுந்த மோதல் வழக்கில் நாம் தமிழர் கட்சி சீமான் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜரானார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், திருச்செங்கோட்டில் மருத்துவர் குழந்தை விற்ற சம்பவம் தமிழகத்தை வெட்கி தலை குனிய வைத்துள்ளதாக சாடினார். 

தொடர்ந்து பேசிய அவர், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் ஆண்களுக்கு சமமாக பெண் உறுப்பினர்களுக்கு  திமுக சீட்டு கொடுக்குமா என வினவினார். மேலும், பாஜக, காங்கிரஸ்  கட்சிகள் காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் இரட்டை வேடம் போடுவதாக விமர்சித்தார். 

திமுக ஆட்சியில் திரைத்துறையினருக்கு நெருக்கடி கொடுக்கப்படுவதாக கூறிய சீமான், நடிகர் விஜயின் லியோ பட சிறப்பு காட்சியை தடுப்பதால் என்ன பலன் கிடைக்கப் போகிறது எனவும் வினவினார்.  விஜய் படத்தை  ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திற்கு வெளியிட வழங்கப்படாதால் பல்வேறு நெருக்கடிகள் கொடுக்கப்படுவதாகவும் சீமான் குற்றம்சாட்டினார்.