சாலை மற்றும் பேருந்து வசதி செய்து தரவேண்டும்.. 300-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டம்!!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சாலை மற்றும் பேருந்து வசதி கோரி 300-க்கும் மேற்பட்டோர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

சாலை மற்றும் பேருந்து வசதி செய்து தரவேண்டும்.. 300-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டம்!!

சிதம்பரம் அருகே கொள்ளிடம் ஆற்றை சுற்றி எருக்கன் காட்டுப்படுகை, கருப்பூர், நலன்புத்தூர், ஒட்டாரப்பாளையம், முள்ளங்குடி உள்ளிட்ட 15 - க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.

இந்த கிராமங்களுக்கு செல்லக்கூடிய பிரதான சாலை பல ஆண்டுகளாக பழுதடைந்து உள்ளதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால், சிதம்பரம் செல்லும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், கூலி தொழிலாளர்கள், அலுவலகம் செல்வோர் என அனைத்து தரப்பினரும் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.

இது சம்பந்தமாக கடலூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லாததால் ஆவேசம் அடைந்த பொதுமக்கள் 300-க்கும் மேற்பட்டோர் சிதம்பரம் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வல்லம்படுகை சோதனைச் சாவடி அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் சுமார் 10 கிலோமீட்டர் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டதை அடுத்து, சிதம்பரம் கோட்டாட்சியர் ரவி, வருவாய் வட்டாட்சியர் ஹரி தாஸ் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.