லஞ்சம் பெற்ற வருவாய் ஆய்வாளர்...! கைது செய்த லஞ்ச ஒழிப்புத்துறை..!

திருத்தணியில் இறப்புச் சான்றிதழ் கேட்டு வந்த இளைஞரிடம் ரூ. 2000 லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் கைது...! லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடவடிக்கை...

லஞ்சம் பெற்ற வருவாய் ஆய்வாளர்...! கைது செய்த லஞ்ச ஒழிப்புத்துறை..!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகரத்தில் வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் ஜெயலட்சுமி. இவரிடம் திருத்தணி அருகில் உள்ள சீனிவாசபுரத்தைச் சேர்ந்த வினோத்குமார் என்பவர் தனது மாமா கஜேந்திரன் மற்றும் தாத்தா கோவிந்த ரெட்டி ஆகிய இருவருக்கும் இறப்புச் சான்றிதழ் கேட்டு வருவாய் ஆய்வாளரிடம் மனு அளித்துள்ளார். இது குறித்து நான்கு மாதங்களாக வருவாய் ஆய்வாளரிடம் கேட்டு வந்துள்ளார். 

இந்த நிலையில் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு திருத்தணிக்கு பணி மாறுதலில் வந்த வருவாய் ஆய்வாளர் ஜெயலட்சுமியிடம் தொடர்ந்து வினோத் குமார், இறப்பு சான்றிதழ் கேட்டு வந்துள்ளார். அதற்கு வருவாய் ஆய்வாளர் ஜெயலட்சுமி ரூ. 2500 லஞ்சம் கேட்டுள்ளார். அதை தருவதாக ஒப்புக்கொண்டு வினோத்குமார், திருவள்ளூரில் உள்ள மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி கலைச்செல்வனிடம் புகார் தெரிவித்துள்ளார்.

 இவரது ஆலோசனையின் பேரில் லஞ்ச பணம் 2000 ரூபாயை வருவாய் ஆய்வாளர் ஜெயலட்சுமி இடம் அவரது அலுவலகத்தில் திருத்தணியில் வழங்கும்போது, மறைந்திருந்த காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி  கலைச்செல்வன் மற்றும் அவரது தலைமையிலான போலீசார், லஞ்சம் பெற்ற வருவாய் ஆய்வாளர் ஜெயலட்சுமியை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் இவரது இடத்தில் அதிகப்படியான ரூ.500 நோட்டுகள் இருந்துள்ளது. இதற்கு லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கணக்கு கேட்டுள்ளனர். இதற்கு ஜெயலட்சுமி, கொடிநாள் வசூல் என கூறி சமாளித்துள்ளார். இந்த நிலையில் லஞ்சம் பெற்ற குற்றத்திற்காக வருவாய் ஆய்வாளர் ஜெயலட்சுமியை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர். இறப்பு சான்றிதழ் கேட்டு வந்த , இளைஞரிடம் லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் கைதான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.