இரண்டாவது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள கல்குவாரி உரிமையாளர்கள்..!

நடவடிக்கை எடுக்கக்கோரி கல்குவாரி உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இன்று இரண்டாவது நாளாக வேலை நிறுத்தம் மற்றும் உண்ணாவிரத போராட்டம்..!!

இரண்டாவது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள கல்குவாரி உரிமையாளர்கள்..!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே காரணம்பேட்டை, கோடங்கிபாளையம், இச்சிப்பட்டி,கொத்துமுட்டிபாளையம், மங்கலம், 63 வேலம்பாளையம் பகுதிகளில் தனியாருக்கு சொந்தமான நூற்றுக்கணக்கான கல்குவாரிகள், கிரஷர் ஆலைகள் இயங்கி வருகின்றன. கட்டுமான தொழிலுக்கு முக்கிய மூலப் பொருட்களாக குவாரிகளில் இருந்து கிடைக்கும் ஜல்லி, எம் சாண்ட், பி சாண்ட் ஆகியவை மாநிலம் முழுவதும் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுவது வழக்கம். இத்தொழிலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் லாரி ஓட்டுனர்கள்,கிளீனர்கள், கல்குவாரி தொழிலாளர்கள் என சுமார் முப்பது லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்பகுதி விவசாயிகள் சிலர் மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டத்தின் காரணமாக மாவட்ட நிர்வாகம், தனியார் கல்குவாரி ஒன்றிற்கு இடைக்கால தடைவிதித்தது. 
இதையடுத்து கல்குவாரி உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள், அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், சமூக ஆர்வலர்கள் விவசாயிகள் என்ற பெயரில் போலி ஆசாமிகள் பணம் கேட்டு மிரட்டுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் அவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் நேற்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகள், ரெடிமிக்ஸ் கான்கிரீட் கலவை லாரிகள் ஆகியவற்றை நிறுத்தி இரண்டு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்து இருந்தனர். 

இந்நிலையில், நேற்று இதன் காரணமாக சுமார் 250 கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். இதனிடையே இரண்டாவது நாளான இன்றும் வாகனங்களை இயக்காமல் நிறுத்தி வைத்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர். இதற்கு அரசு உடனடியாக, தற்காலிகமாக மூடிய கல்குவாரியை திறக்க அனுமதி வழங்க வேண்டும் என்றும் சட்ட விதிமுறைகளின் படி இயங்கி வரும் கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதை கைவிட்டு, பணம் கேட்டு மிரட்டி வரும் சமூக ஆர்வலர்கள் விவசாயிகள் பெயரில் உள்ள நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து கல்குவாரி தொழிலையும் இதனை நம்பி உள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் காப்பாற்ற வேண்டும் என்றும் அவர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.