புரட்டாசி சனிக்கிழமையை ஒட்டி பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜைகள்...!

புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையான இன்று தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது.

திருச்சியிலுள்ள ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் புரட்டாசி சனிக்கிழமையையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். அப்போது துளசி மாலை சாத்தியும் , நெய்விளக்கிட்டும் பக்தர்கள் நேர்த்திகடனை செலுத்தினர்.

தூத்துக்குடியில் உள்ள வைகுண்டபதி பெருமாள் கோயிலில் பக்தர்கள் வழிபாடு நடத்தினர். அப்போது சுவாமிக்கு, திருப்பதி வெங்கடாஜலபதி பெருமாள் அலங்காரம் செய்யப்பட்ட நிகழ்வு அனைவரையும் கவர்ந்தது.

கிருஷ்ணகிரி மாவட்டம் தானம்பட்டி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ பெருளப்பன் சுவாமி கோயிலில் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை ஒட்டி திருவிழா நடைபெற்றது. 15 கிராமங்கள் ஒன்றிணைந்து நடத்தப்பட்ட இவ்விழாவில் கருடவாகனம் மற்றும் ஆஞ்சநேயர் பல்லக்கில் எழுந்தருளிய பொருமாள் வீதியுலா நடைப்பெற்றது.

இதையும் படிக்க : ரஜினிக்கு ஒரு நியாயம்...விஜய்க்கு ஒரு நியாயமா? சீமான் கேள்வி!

திருவண்ணாமலையில் உள்ள பூத நாராயண பெருமாள் திருக்கோயிலில் காலை முதலே சிறப்பு அபிஷேக அலங்காரம் நடைபெற்றது. இந்த சிறப்பு பூஜையில் பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என பக்தி பரவசத்துடன் கோஷமிட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள திருப்புல்லாணி ஆதி ஜெகன்நாத பெருமாள் திருக்கோயிலில் ஏராளமான பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பத்மாசனி தாயார் சன்னதி, தர்ப்பசன ராமர், சந்தான கோபாலகிருஷ்ணர் சன்னதி, உள்ளிட்ட சன்னிதிகளில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. 

இதே போல திருவள்ளூர் மாவட்டம், திருவாயற்பாடி பகுதியிலுள்ள  அருள்மிகு சவுந்தர்யவல்லி தாயார் சமேத ஹரிகிருஷ்ண பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பின்னர் மேள தாளம் முழங்க சுவாமி வீதியுலா நடைப்பெற்றது.