சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க முயன்ற புதுச்சேரி மீனவர்களை விரட்டியடித்த கடலோர காவல்படை

கடலூரில் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க முயன்ற புதுச்சேரி மீனவர்களை தமிழக கடலோர காவல்படை மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  

சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க முயன்ற புதுச்சேரி மீனவர்களை  விரட்டியடித்த கடலோர காவல்படை

கடலூர் மாவட்டத்திற்குட்பட்ட கடல் பகுதியில் புதுச்சேரியை சேர்ந்த மீனவர்கள் சிலர்  அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், மீன்வளத்துறை உதவி இயக்குநர் சின்னகுப்பன் தலைமையிலான அதிகாரிகள், கடலோர பாதுகாப்பு படை உதவியுடன் ரோந்து பணியை மேற்கொண்டனர்.

அப்போது சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடித்து கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, படகுகளை அதிகாரிகள் சுற்றிவளைத்ததால் மீனவர்கள் கடும்  வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, கடலோர காவல்படை போலீசார் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து, அனைத்து சுருக்குமடி வலை படகுகளையும் விரட்டியடித்தனர்.


புதுச்சேரி மீனவர்கள்  இதுபோன்ற செயலில் ஈடுபடுவதால் சட்ட ஒழுங்கு பிரச்னை எழும் ஆபத்து உள்ளதாகவும், இரு மாநில அரசுகளும் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் கடலூர் மாவட்ட மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.