தமிழ்நாட்டில் கல்லூரிகள் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு...

செப்டம்பர் 1ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை கல்லூரிக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கல்லூரிகள் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு...

தமிழகத்தில் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படுவதால், அதற்கு ஒரு வார காலத்துக்கு முன்பே கல்லூரி வளாகத்தை சுத்தப்படுத்தி, அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும் எனவும், பல மாதங்களுக்குப் பிறகு கலூரிகள் திறக்கப்படுவதால், கல்லூரி வளாகத்தில் பயன்படாத பிளாஸ்டிக் கப், தேநீர் கப், டயர்கள், விஷ ஜந்துகள் தஞ்சமடையும் இடங்கள் ஏதும் இருப்பின் அவற்றை அப்புறப்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா பேரிடர் காலத்தில் கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டுள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு, ஆன்லைன் வகுப்புகளே தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் கட்டாயம் 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் எனவும்,தடுப்பூசி போடாத பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு அந்தந்த கல்லூரிகளிலேயே, தடுப்பூசி செலுத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்யவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மாற்றுத் திறனாளி மாணவர்கள் கல்லூரிகளுக்கு வருகை தர அவசியமில்லை எனக் கூறப்பட்டுள்ளது.மேலும், நோய்த்தொற்று உள்ள மாணவர்களைக் கண்டறிந்தால், அவர்களுடன் தொடர்புடைய அனைவருக்கும் RT - PCR சோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும்,நுழைவாயில்களில் கண்காணிப்பு குழு அமைத்து வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா? என்று சரிபார்க்க வேண்டும் எனவும், கல்லூரிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.