சிறையில் இருக்கும் கைதிகளின் உறவினர்களுக்கு ஒரு நற்செய்தி...

கொரோனா காரணமாக சிறைவாசிகளை அவர்களது உறவினர்கள் காண முடியாத நிலை ஏற்பட்ட நிலையில், தற்போது கைதிகளை சந்தித்து பேச உறவினர்களுக்கு தமிழக சிறைத்துறை அனுமதி வழங்கியுள்ளது.

சிறையில் இருக்கும் கைதிகளின் உறவினர்களுக்கு ஒரு நற்செய்தி...

கொரோனா தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறைக்கைதிகளின் நேர்காணல் மீண்டும் தமிழக சிறைகளில் தொடங்கியது. ஒரே நாளில் 180 கைதிகள் நேர்காணல் நடத்தி உள்ளதாக சிறைத்துறை தெரிவித்துள்ளது. 

தமிழக சிறைகளில்  கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை பரவுவதை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 27.4.2021 முதல் சிறைகைதிகள் உறவினர்களுடனான நேர்காணல் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டிருந்தது. அதற்கு பதிலாக வழக்கமான தொலைபேசி அழைப்புகளுடன், சிறைகளுக்கு ஆன்ட்ராய்டு கைப்பேசிகள் வழங்கப்பட்டு, சிறைகைதிகள் உறவினர்களுடன் வீடியோ கால் செய்யவும், e-Mulakat வசதியின் வாயிலாக காணொலி மூலம் நேர்காணல் செய்யவும் அனுமதிக்கப்பட்டு வந்தனர். 

நேர்காணலை மீண்டும் தொடங்கக்கோரி சிறைகைதிகள், உறவினர்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.  கொரோனா வைரஸ் பரவும் வீதம் படிப்படியாக குறைந்து வருவதையும், மாநிலத்தில் இயல்பு நிலை திரும்பி வருவதையும், சிறைகைதிகள் நலனை கருத்தில் கொண்டு, சிறைகைதிகள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடனான நேரடி நேர்காணலை முதல் முதல் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் மீண்டும் தொடங்கிட காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை தலைமை இயக்குநர் சுனில் குமார் சிங் உத்தரவிட்டார்.

இதன்படி, நேற்று முதல் அனைத்து மத்திய சிறைகள், பெண்கள் தனிச்சிறைகள் மற்றும் மாவட்ட சிறைகளில் சிறைகைதிகளின் நேர்காணல் ஏற்கனவே வெளிடப்பட்ட வழிமுறைகளின் அடிப்படையில் மீண்டும் தொடங்கப்பட்டது.  வெவ்வேறு சிறைகளை சேர்ந்த மொத்தம் 180 சிறைகைதிகள் (174 ஆண் மற்றும் பெண் சிறைவாசிகள்) அவர்களின் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் வழக்கறிஞர்களால் நேர்காணல் செய்யப்பட்டதாக சிறைத்துறை நிர்வாகம் அறிவித்துள்ளது