தேவைக்கேற்ப முதுநிலை ஆராய்ச்சி மையங்கள்...! அமைச்சர் பொன்முடி அறிவிப்பு...!!

தேவைக்கேற்ப முதுநிலை ஆராய்ச்சி மையங்கள்...! அமைச்சர் பொன்முடி அறிவிப்பு...!!

தேவைக்கேற்ப கல்லூரிகளில் முதுநிலை ஆராய்ச்சி மையங்கள் அமைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில், தனியார் கல்லூரியில் கல்வி கட்டணம் அதிகமாக இருப்பதால் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ஒரு அரசு கல்லூரியை வாணியம்பாடியில் கட்டித் தர வேண்டும் என்றும் அதேபோல் முதுநிலை ஆராய்ச்சி மையம் தற்போது விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளதால், அதையும் திருப்பத்தூர் மாவட்டத்தில் ஏதேனும் ஒரு கல்லூரியில் அமைத்துக் கொடுத்தால் மாணவர்கள் பயன்பெறுவார்கள் எனவும் வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ஒவ்வொரு தொகுதியிலும் அரசு கல்லூரி அமைத்து தர வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டதன் அடிப்படையில், தற்போது 31 புதிய கல்லூரிகளை அமைத்துள்ளோம் என்றும், வாணியம்பாடி பகுதியில் இஸ்லாமிய கல்லூரியில் 894 மாணவர்களை சேர்க்க இடம் இருக்கும் நிலையில், தற்போது 761 மாணவர் சேர்க்கை நடந்துள்ளதாகவும், மேலும் ஜெயின் கல்லூரியிலும் 800-க்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக உள்ளதால், அதை நிரப்புவதற்கு உறுப்பினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

மேலும், வரும் நிதியாண்டிலேயே ஒவ்வொரு தொகுதியிலும் அரசு கல்லூரி என்ற திட்டத்தின் அடிப்படையில் முன்னுரிமை கொடுத்து வாணியம்பாடி தொகுதியில் கல்லூரி கட்டுவதற்கு நிதிநிலைக்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

தொடர்ந்து பேசுகையில், முதுநிலை ஆராய்ச்சி மையம் என்பது பொதுவாக பல்கலைக்கழகத்தில் தான் பெரும்பாலும் அமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், இருப்பினும் மாணவர்களின் தேவைக்கேற்ப கல்லூரிகளில் அமைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் மாணவர்களின் தேவையை பூர்த்தி செய்யவே "நான் முதல்வன் திட்டத்தை" முதலமைச்சர் ஏற்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிக்க:ஆலங்குளத்தில் தீயணைப்பு நிலையத்திற்கு 3.75 கோடி...! முதலமைச்சர் அறிவிப்பு...!!