15 லட்சம் ரொக்கம், சொத்து ஆவணங்கள்... மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வீட்டில் பறிமுதல்...

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வீடு மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய  திடீர் சோதனையில் 15  லட்சம் ரொக்கம், தங்கம் மற்றும் சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

15 லட்சம் ரொக்கம், சொத்து ஆவணங்கள்... மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வீட்டில் பறிமுதல்...

கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஓய்வு பெற்ற ஐஎஃப்எஸ்  அதிகாரியான வெங்கடாசலம் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவராக நியமிக்கப்பட்டார். இவரது பணிக்காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு செய்யப்பட்ட நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

சென்னை கிண்டியில் உள்ள மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம், வேளச்சேரியில் உள்ள வீடு, சொந்த ஊரான சேலம் ஆத்தூர் உட்பட ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.  பல தொழில் நிறுவனங்களுக்கு மாசு கட்டுப்பாட்டு வாரிய தடையில்லாச் சான்று வழங்கிய விவகாரத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக கிடைக்கப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் வெங்கடாச்சலம் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

தற்போது வரை நடத்தப்பட்ட சோதனையில் 15 லட்ச ரூபாய் பணமும் தங்கம் மற்றும் சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.