அகவை 70ல் அடியெடுத்து வைக்கும் கவிப்பேரரசு வைரமுத்து!

அகவை 70ல் அடியெடுத்து வைக்கும் கவிப்பேரரசு வைரமுத்து!

இன்று 70-வது பிறந்தநாளில் அடியெடுத்து வைக்கும் கவிஞர் வைரமுத்துவுக்கு திரையுலகினர் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்து இன்று மக்கள் கொண்டாடும் கவிஞராக வளர்ந்திருக்கிறார் கவிப்பேரரசு வைரமுத்து.

1953-ம் ஆண்டு ஜூலை மாதம் 13-ம் தேதியன்று தென்கோடி தேனியைச் சேர்ந்த அங்கம்மாள் ஈன்றெடுத்த முத்துவுக்கு சூட்டப்பட்ட பெயர் வைரமுத்து. வடுகப்பட்டியையும், வைகை ஆற்றங்கரையும் விவசாயத்தையும் ஆழ ஆராய்ந்து பார்த்து வளர்ந்த வைரமுத்து எழுத்துலகின் அரிமாவானார். 

பாரதியார், பாரதிதாசன் போன்ற புரட்சிமிகு கவிஞர்களின்பால் நீங்கப்பெறாத அன்பு கொண்டவர் திராவிட சித்தாந்தங்களை தேடிப் படித்து தெளிவுற்றார். கவியரசு கண்ணதாசனின் உள்ளங்கையில் இருந்த திரையுலகம் வாலிபக் கவிஞர் வாலியின் கரங்களுக்கு கைமாறிய அதே வேளையில் வாரி அணைத்தார் வைரமுத்து. 

1981-ம் ஆண்டு இசைஞானி இளையராஜாவிடம் அறிமுகமான வைரமுத்துவுக்கு தேர்வு நடத்தப்பட்டது. மெட்டுக்கு பாடல் எழுத முடியுமா? என கேட்டதற்கு, அடுத்த ஐந்து நிமிடத்திலேயே பல்லவியை கொடுத்தார். கவியுலகில் தனக்கான அரியணையைத் தேர்ந்தெடுத்தார். 

வார்த்தைகளால் சொல்ல முடியாத வலியை ஒற்றை வரியில் அடைப்பதே கவிப்பேரரசுவுக்கு கைவந்தக் கலை.கடினமான சொற்களைக் கூட இசையோடு இழைந்து கொடுத்து இதயத்தை வருடச் செய்ததார் வைரமுத்து. 

வைரமுத்துவின் திரைப்பயணம் குறிப்பிட்ட இசையமைப்பாளரோடு மட்டுமே தொடர்ந்திருக்கவில்லை. இளையராஜாவில் தொடங்கி, ஏ. ஆர்.ரகுமான், வித்யாசாகர், ஹாரிஸ் ஜெயராஜ், ஜி.வி.பிரகாஷ், அனிருத் வரை தற்போதைய இளம் தலைமுறையினருடன் கைகோர்த்து வருகிறார். 

பாடல் வரிகள் மட்டுமே அவரது வெற்றியா என்று கேட்டால் அதுதான் இல்லை. சினிமாவைத் தாண்டி அதியற்புதமான புத்தகங்களை வடித்து எழுத்துலகில் அசைக்க முடியாத ஜாம்பவானாக தனிப்பெரும் சாம்ராஜ்யத்தை படைத்தார். வைகறை மேகங்களில் தொடங்கி, என் பழைய பனை ஓலைகள், மௌனத்தின் சப்தங்கள், தண்ணீர் தேசம், மூன்றாம் உலகப்போர், கருவாச்சி காவியம், தமிழாற்றுப்படை வரை ஏராளமான புத்தகங்களை படைத்துள்ளார்.

இசைக்கான வெற்றிடத்தை நிரப்புவதல்லாமல் தமிழ் மொழியின் அருமையை உட்புகுத்தி சபாஷ் போட வைத்தவர். முதல் மரியாதை, ரோஜா, கருத்தம்மா, சங்கமம், கன்னத்தில் முத்தமிட்டால், தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை ஆகிய படங்களுக்காக  7 தேசிய விருதுகளை அள்ளியிருக்கிறார். 

6 முறை தமிழ்நாடு மாநில சிறப்பு விருதுகளும், 12 முறை பிலிம்பேர் விருதுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டு அதில் 3 முறை வெற்றி பெற்றும், சைமா உள்பட ஏராளமான விருதுகளை வாரிக்குவித்த வைரமுத்துவின் வெற்றிப்பயணம் தொடர்ந்து வருகிறது. 

இதையும் படிக்க:டிஎன்பிஎல் தொடா்: கோவை கிங்ஸ் அணி சாம்பியன்!