அதிமுக பொதுக்குழு கூட்ட முன்னேற்பாடுகளால் ஏற்படும் போக்குவரத்து...அவதியில் பொதுமக்கள்!

அதிமுக பொதுக்குழு கூட்ட முன்னேற்பாடுகளால் ஏற்படும் போக்குவரத்து...அவதியில் பொதுமக்கள்!

அதிமுக பொதுக்குழு கூட்டம் வரும் 11 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், மண்டபத்தில் முன்னேற்பாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் சென்னை வானகரத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான போக்குவரத்து நெரிசலால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

அதிமுக பொதுக்குழு கூட்டம் வரும் ஜூலை 11:

அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்து வருகிறது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் இறப்பிற்கு பிறகு சசிகலாவால் நியமிக்கப்பட்டவர் தான் எடப்பாடி பழனிசாமி. ஆனால் கட்சியின் பொதுச்செயலாளராக அல்ல. கட்சியை வழிநடத்துவதற்காக நியமிக்கப்பட்டார். அதற்கு பிறகு கட்சிக்கு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு பிறகு அந்த பொதுச்செயலாளர் பொறுப்பு யாருக்கும் கிடையாது. ஒருங்கிணைப்பாளராக ஓ.பி.எஸ் - ம், இணை ஒருங்இணைப்பாளராக இ.பி.எஸ் - ம் இருப்பதாக ஒருமனதாக முடிவெடுத்து கட்சியை வழிநடத்தி வந்தனர். அதிமுகவில் இரட்டை துப்பாக்கிகளாக செயல்பட்டு வந்தனர். இந்நிலையில் கட்சியில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் திடீரென ஒற்றைத்தலைமை கோஷம் எழுந்தது. அதற்குபிறகு ஓ.பி.எஸ்-ம் இ.பி.எஸ்-ம் எதிரெதிர் துருவங்களாக பிரிந்தனர். அதுவரை கட்சியின் இரட்டை துப்பாக்கியாய் செயல்பட்டு வந்தவர்கள் தற்பொழுது எதிரும் புதிருமாய் இருந்து வருகின்றனர். இந்த பின்னணியில் வருகிற ஜூலை 11 ஆம் தேதி இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக பொதுக்குழு கூட்டம்  நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை வானகரத்தில் கடும் போக்குவரத்து:
 
சென்னை கோயம்பேடு, மதுரவாயல் மற்றும் வானகரம் சாலைகள் முக்கிய போக்குவரத்து சாலைகளாக இருந்து வருகிறது. தினந்தோறும், உள்ளூர் மற்றும் வெளி மாநில, மாவட்டங்களிலிருந்து ஏராளமான வாகனங்கள் இச்சாலையை கடந்து செல்கின்றன. இந்த நிலையில், வருகிற 11-ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டமானது சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் மீண்டும் நடைபெறவுள்ளது. பொதுக்குழு கூட்டத்தை முன்னிட்டு மண்டபத்தில் முன்னோற்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் சாலையில் நீண்ட தூரம் அணிவகுத்து செல்வதால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 

கடும்போக்குவரத்து காரணமாக பொதுமக்கள் கோரிக்கை:

அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற இன்னும் பத்து நாட்கள் உள்ள நிலையில், தற்போதே இந்த சூழல் என்றால் பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ள நாளன்று ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கண்டு வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். எனவே இதற்கு உரிய நடவடிக்க எடுக்க வேண்டி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.