புத்தாடைகள், பட்டாசுகள் வாங்க மக்கள் ஆர்வம்...!கடைவீதிகளில் குவியும் பொதுமக்கள்!!

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஆறுநாட்களே உள்ள நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் புத்தாடைகள், இனிப்புகள், பட்டாசுகளை வாங்க பொதுமக்கள் கடைவீதிகளில் குவிந்துள்ளனர். 

இந்து பண்டிகைகளில் முக்கியமானதாக கொண்டாடப்படும் தீபாவளி வரும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, சென்னை தியாகராய நகரில் விடுமுறை தினமான இன்று பொதுமக்கள் புத்தாடைகள் வாங்க குவிந்துள்ளனர். கூட்ட நெரிசல் அதிகம் உள்ளதால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் கயிறு கட்டி மக்கள் கூட்டத்தை சீர் செய்து வருகின்றனர். 

இதையும் படிக்க : இரண்டு நாள் சோதனைக்கு பின் அபிராமி ராமநாதனை விசாரணைக்கு அழைத்துச் சென்ற அமலாக்கத்துறை!

தீபாவளிக்கு புத்தாடைக்கு அடுத்தபடியாக பார்க்கப்படுவது பட்டாசுதான். இதற்காக சென்னை தீவுத்திடலில் அரசு அனுமதியுடன் அமைக்கப்பட்டு 55 கடைகளில் பல்வேறு வகையான பட்டாசுகள் புதுபுது ரகங்களில் விற்பனைக்கு வந்துள்ளது. 300 ரூபாய் முதல் ஆயிரத்து 100 ரூபாய் வரை பட்டாசு கிஃப்ட் பாக்ஸ்கள் விற்பனைக்கு வந்துள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். 

இதேபோல் திருப்பூர் மாநகரில் தீபாவளி பண்டிகைக்கு பொருட்கள் வாங்குவதற்கு கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. புதிய சந்தை வீதி, பழைய மற்றும் புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் புத்தாடைகளை வாங்க புலம்பெயர்ந்த தொழிலாளர்களும் அதிகளவில் கூடியதால் வியாபாரம் களை கட்டியது.