மற்ற தோழமைக் கட்சிகள் கூட்டணிக்குள் என்ட்றி கொடுப்பார்கள். நாங்கள் அந்த கூட்டணிக்கு சென்ட்றி-களாக இருப்போம்"

மற்ற தோழமைக் கட்சிகள் கூட்டணிக்குள் என்ட்றி கொடுப்பார்கள். நாங்கள் அந்த கூட்டணிக்கு சென்ட்றி-களாக இருப்போம்"

திராவிடர் கழகத்தை பொருத்தவரை  என்றைக்கும் பதவி துச்சமானது என தி.க.தலைவர் கி. வீரமணி கூறியுள்ளார். 

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணியின் பொதுவாழ்வை கவுரவிக்கும் வகையில் 90-இல் 80 அவர்தான் வீரமணி என்ற நிகழ்ச்சி சென்னை தியாகராய நகரில் உள்ள சர் பிட்டி தியாகராயர் அரங்கில் நடைபெற்றது.

இதில் தி.மு.க மாநிலங்களவை குழுத் தலைவர் திருச்சி சிவா, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப. வீரபாண்டியன், திராவிடர் கழக பிரச்சாரச் செயலாளர் வழக்கறிஞர் அருள்மொழி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.

அப்போது  தி.க.தலைவர் கி. வீரமணி பேசுகையில், 

"  என்னுடைய பிறந்தநாளை கொண்டாட என்றுமே நான் ஒப்புக் கொண்டது இல்லை. ஆனால் இந்தமுறை ஏன் ஒப்புக்கொண்டேன் என்றால் இந்த 90 வரை நாம் வந்ததற்கு காரணம் என்ன என்ற சூட்சமத்தை சொல்லத்தான். இந்த 90 ஆண்டுகள் எப்படி வந்தது என்றால், 80 ஆண்டுகள் நான் பணியாற்றியதால் தான். என்னுடைய இத்தனை ஆண்டுகள் கால பயணத்திற்கு காரணம் தந்தை பெரியார் என்ற அறிவாசான் தான். அவருக்கு தான் நான் நன்றி தெரிவிக்க வேண்டும். 

கருப்புச் சட்டை இல்லாத அரசியல் கட்சித் தலைவர்களே இல்லை. எதையாவது எதிர்த்து போராட வேண்டும், குரல் கொடுக்க வேண்டும் என்றால் அதற்கு கருப்புச் சட்டை அணிந்து கொண்டு தான் போராட வேண்டும் என்ற நிலை தான் இன்றைக்கு உள்ளது. இதைவிட கருப்புக்கு என்ன மரியாதை வேண்டும். 

பெரியாரிடம் இருந்து அண்ணா பிரிந்துவிட்டார் என்ற நிலை வந்தபோது, அன்றைக்கு இருந்த ஆரியம் மகிழ்ச்சி அடைந்தன. ஆனால் அப்படி மகிழ்ச்சி அடைந்தவர்களில் ஒருவரான ராஜாஜிக்கு ஏமாற்றம் தந்தவர்கள் அண்ணாவை தவிர வேறு யாரும் இருக்க முடியாது. அன்றைய கால அரசியலில் இருந்த எதிரிகள் எல்லாம் நாணயமான எதிரிகள். ஆனால் இன்றைக்கு அப்படி இல்லை. அந்த நாணயமற்ற எதிரிகள் வாலாட்டுவதை நிறுத்தும் வரை நம்முடைய போராட்டம் குணம் தீராது. அந்த எதிரிகளை எல்லாம் அவர்களை எல்லாம் சமாளிக்கவும் எதிர்கொள்ளவும் தேவையான வியூகத்தை பெரியார் நமக்கு தந்துள்ளார்.

கலைஞர் மறைந்துவிட்டார் தமிழ்நாட்டில் வெற்றிடம் என்று சில வெத்து வெட்டுகள் சொன்னார்கள். ஆனால் நாங்கள் சொன்னோம், தமிழ்நாட்டில் வெற்றிடம் இல்லை; இந்த நாட்டுக்கே இனி தமிழ்நாடுதான் கற்றிடமாக இருக்கப் போகிறது என்று. அதுதான் இன்றைக்கு நடந்து கொண்டு இருக்கிறது.

பெரியார் அவர்கள் தன்னுடைய கடைசி உரையில் சொன்னார், நான் சாவதில் கவலை இல்லை; எனக்கு வயதாகிவிட்டது. ஆனால்   உங்களையெல்லாம் சூத்திரனாக விட்டுவிட்டு செல்கிறேனே,  இந்த சாதி அவலத்தை ஒழிக்காமல் செல்கிறேனே" என்று.  தன்னுடைய நெஞ்சில் தைத்த முள்ளாக அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக முடியாத நிலை தொடர்ந்து தான் இருக்கிறது என்று  குறிப்பிட்டு பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை எடுக்க முடியவில்லையே என்று நாங்கள் கூட பலமுறை பேசி உள்ளோம். கலைஞர் கூட ஒருமுறை சொன்னார், பெரியாருக்கு அரசு மரியாதை தான் என்னால் கொடுக்க முடிந்தது, அவர் நெஞ்சில் தைத்த அந்த முள்ளை எடுக்க முடியவில்லையே' என்று. 

ஆனால் நெஞ்சில் தைத்த அந்த முள்ளை எடுத்த பெருமை நமது ஒப்பற்ற முதலமைச்சர் அவர்களுக்கு தான் உண்டு. அவர் மே மாதம் ஆட்சிக்கு வந்து, ஆகஸ்ட் மாதத்தில் இதுவரை இல்லாத வகையில் தேர்வான அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகர் நியமன ஆணையை வழங்கினாரே, அந்த காட்சியை தொலைகாட்சியில் பார்த்து நான் உணர்ச்சி பட்டதை என் வாழ்நாளில் மறக்க முடியாது.

அதை  செயல்படுத்திவிட்டு அன்றைக்கு மாலை பெரியார் திடலுக்கு வந்த முதலமைச்சரின் கைகளை பிடித்துக் கொண்டு அன்றைக்கு நான் கண்ணீர் விட்டேன். இனி நான் எப்போது செத்தாலும் பரவாயில்லை என்றேன். பெரியாருக்காக ஆட்சியை இழந்தால் எனக்கு பெருமை தான் என்று சொன்னவர் கலைஞர்.
எனவே தான் ஆட்சிகள் என்பது இனத்தின் மீட்சிக்காக என்பதில் உறுதியாக இருக்கிறோம். 

திராவிடர் கழகத்தை பொருத்தவரை  என்றைக்கும் பதவி துச்சமானது; முதலமைச்சர் முன்னிலையில் சொன்னதை இப்போதும் சொல்கிறேன், இந்த திராவிட மாடல் ஆட்சியை காப்பவர்களாக இருப்போம். மற்ற தோழமைக் கட்சிகள் எல்லாம் கூட்டணிக்குள் என்ட்றி கொடுப்பார்கள். நாங்கள் அந்த கூட்டணிக்கு சென்ட்றி-களாக (பாதுகாவலர்) இருப்போம்" என்று பேசினார்.

இதையும் படிக்க  | "குண்டர் சட்டத்தில் திருத்தம்" 4 வாரம் அவகாசம்!