கனமழை : கடலோர மாவட்டங்களை கண்காணிக்க முதலமைச்சர் உத்தரவு!

கனமழை : கடலோர மாவட்டங்களை கண்காணிக்க முதலமைச்சர் உத்தரவு!

தொடர் கனமழையால் கடலோர மாவட்டங்களை கண்காணிக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

கடந்த இரண்டு மாதங்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், நேற்று காலை முதல் தொடங்கிய மழையானது, இன்று வரை தொடர்ந்து கனமழையாக பெய்து வருகிறது. ஒருபக்கம் தொடரும் மழையால் ஆங்காங்கே மழைநீர் தேங்கி இருப்பதால் மக்கள் அவதியடைந்துள்ளனர். மறுபக்கம், கோடை வெயில் தணிந்து குளிர்ச்சியான சூழலும் நிலவி வருகிறது. 

இதையும் படிக்க : ”எங்கேயும் எப்போதும்” பட பாணியில் நிகழ்ந்த பேருந்து விபத்து... கடலூரில் பரபரப்பு!

இந்நிலையில் சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், சென்னையில் மழைநீரை அகற்றும் பணி, தூர்வாரும் பணியில் 2 ஆயிரம் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதாக கூறினார். 

மேலும், சென்னையில் மொத்தம் உள்ள 22 சுரங்கப்பாதைகளில் 21 சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கவில்லை என்று விளக்கம் அளித்தவர், உயிர் பாதிப்பு எதுவும் இல்லை என கூறினார். 

தொடர்ந்து பேசிய அவர், தொடர் கனமழையால் கடலோர மாவட்டங்களை கண்காணிக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.