கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே 2 தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடலூரிலிருந்து பண்ருட்டிக்கு தனியார் பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிச் சென்று கொண்டிருந்தது. இதேப்போல், பண்ருட்டியிலிருந்து கடலூர் நோக்கி மற்றொரு தனியார் பேருந்து பயணிகளுடன் வந்தது. இந்நிலையில் இரு பேருந்துகளும் பட்டாம்பாக்கம் என்ற இடத்தில் சென்ற போது எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டது.
’எங்கேயும் எப்போதும்’ பட பாணியில் நிகழ்ந்த இந்த பயங்கர விபத்தில் இரு பேருந்துகளின் முன் பகுதியும் அப்பளம் போல் நொறுங்கியதில் 70 க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர். இதையடுத்து பேருந்துகளின் இடிபாடுகளில் சிக்கி இருந்தவர்கள் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தவர்களில் மூன்று பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்துக்கு அதிவேகமே காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.