தொடரும் கனமழை...சென்னைக்கு ஆரஞ்ச் நிற அலர்ட்...!

தெற்கு அந்தமான் கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி கடந்த 27-ம் தேதி உருவாகியது. இது மேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவி வந்த நிலையில், தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதையும் படிக்க : 5 சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி...!

அதன் பின்னர், வடமேற்கு திசையில் நகா்ந்து தென்மேற்கு மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் டிசம்பா் 2-ம் தேதி புயலாக வலுவடையும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் சென்னைக்கு டிசம்பர் 2 மற்றும் 3-ம் தேதிகளில் ஆரஞ்ச் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளதோடு, அடுத்த 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் எனவும் தொிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூா் உள்ளிட்ட 25 மாவட்டங்களில் இன்றும் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதேபோல் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் தொிவிக்கப்பட்டுள்ளது.