தனியார் வங்கிகளில் பெறப்பட்ட நகைக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் : எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்...

தனியார் வங்கிகளில் பெறப்பட்ட நகைக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

தனியார் வங்கிகளில் பெறப்பட்ட நகைக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் :   எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்...

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடனிலே பிறந்து, கடனிலே வளர்ந்து, கடனோடு மடிபவன்‌தான்‌ விவசாயி என்பது ஒரு நிதர்சனமான உண்மை என கூறியுள்ளார்.ஆனால்‌, தமிழ்‌நாட்டில்‌ கூட்டுறவு வங்கிகள்‌, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள்‌ மற்றும்‌ தனியார்‌ வங்கிகள்‌ என பொதுமக்கள்‌ எந்த வங்கியில்‌ வேண்டுமானாலும்‌ 5 பவுன்‌ வரை அடமானம்‌ வைத்து நகைக்‌ கடன்‌ பெற்றுக்கொள்ளுங்கள்‌ என்றும்‌, தாங்கள்‌ ஆட்சி பொறுப்பேற்ற உடனேயே,  5 பவுன்‌ வரை அடமானம்‌ வைத்து வாங்கிய நகைக்‌ கடன்கள்‌ அனைத்தும்‌ தள்ளுபடி செய்யப்படும்‌ எனவும்‌, தேர்தல் நேரத்தில் மேடைக்கு மேடை பேசி, தற்போதைய முதலமைச்சர் ஆட்சியை பிடித்ததாகவும் குறிப்பிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி,

சில நாட்களுக்கு முன்பு பல்வேறு நிபந்தனைகளுடன்‌ வெளியான அரசாணையில், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள்‌ மற்றும்‌ தனியார்‌ வங்கிகள்‌ மூலம்‌ வழங்கப்பட்ட நகைக்‌ கடன்‌ தள்ளுபடி பற்றி எந்த விவரமும் இல்லை என சுட்டிக் காட்டியுள்ளார்.எனவே, தி.மு.க. வின்‌ தேர்தல்‌ அறிக்கையில்‌ அறிவித்தவாறு, தேசிய மயக்கமாக்கப்பட்ட வங்கிகள்‌ மற்றும்‌ தனியார்‌ வங்கிகள்‌ உட்பட அனைத்து வங்கிகளிலும்‌ 5 பவுன்‌ வரை அடமானம்‌ வைத்து பெறப்பட்ட நகைக்‌ கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்‌ என, தி.மு.க. அரசை அவர் வலியுறுத்தியுள்ளார்.