வேட்பாளர் முகவர்கள் இல்லாமல் வாக்கு எண்ணிக்கை... வெற்றி அறிவிப்பை எதிர்த்து சாலை மறியல்...

வேட்பாளர் முகவர்கள் இன்றி வாக்கு எண்ணிக்கை செய்து   வெற்றி பெற்றுவிட்டதாக தேர்தல் அலுவலர் அறிவித்ததால் நீதி கேட்டு வல்லம் ஊராட்சியில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட காளியம்மாள் அருள்தாஸ் ஆதரவாளர்களுடன் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்.

வேட்பாளர் முகவர்கள் இல்லாமல் வாக்கு எண்ணிக்கை... வெற்றி அறிவிப்பை எதிர்த்து சாலை மறியல்...

திருப்பெரும்புதூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் வல்லம் ஊராட்சி சார்பாக காளியம்மாள் அருள்தாஸ் என்பவர் திமுக காங்கிரஸ் கூட்டணி சார்பில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். இவரை எதிர்த்து அதிமுக கட்சியை சேர்ந்த விமலாதேவி தர்மா போட்டியிட்டார். வாக்கு எண்ணிக்கை நடைபெற்று கொண்டிருக்கும் பொழுது அதிமுக வேட்பாளரின் கணவர் மற்றும் அவர் உறவினர்கள் காளியம்மாள் அருள்தாஸ் மற்றும் அவருடைய  முகவர்களை மிரட்டியதாகவும் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாகவும் வாக்கு எண்ணிக்கை நிறுத்திவிட்டு தேர்தல் நடத்தும் அலுவலரிடம் இது குறித்து புகார் அளிக்க சென்றுள்ளனர்.

வல்லம் ஊராட்சியில் 1வது வார்டு மற்றும் 3வது வார்டு பதிவான வாக்குகளை எண்ணி முடிக்காத நிலையில் காளியம்மாள் அருள்தாஸ் வேட்பாளர் மற்றும் அவருடைய முகவர்கள் இல்லாமலே அதிமுக வேட்பாளர் மற்றும் அவர் முகவர்கள் முன்னிலையில் வாக்கு எண்ணிக்கை நடத்தியுள்ளனர்.

காளியம்மாள் அருள்தாஸ் தேர்தல் அலுவலரிடம், தாங்கள் மிரட்டப்பட்டது குறித்தும், வாக்கு எண்ணிக்கையில் குளறுபடிகள் உள்ளதாகவும், எனவே மறு வாக்கு எண்ணிக்கை நடைபெற வேண்டும் என்றும் மனு அளித்துள்ளனர். 

ஆனால் மனுவை வாங்கி வைத்துக்கொண்டு தேர்தல் அலுவலர் முத்துசுந்தரம் அலட்சியப்படுத்தி அதிமுக வேட்பாளர் வல்லம் ஊராட்சி ஒன்றியத்தில் பதிவான வாக்குகளை விட அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் என்று அறிவித்தார். 

பதிவான வாக்குகளின் அடிப்படையில் அதிமுக வேட்பாளர் விமலாதேவி வெற்றி பெற்றுவிட்டதாக தேர்தல் அலுவலர் அறிவித்ததால் நீதி கேட்டு காளியம்மாள் அருள்தாஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தேர்தல் அலுவலரை முற்றுகையிட்டனர். ஆனால் காவல் துறையினரின் துணையுடன் அவர்களை வெளியேற்றி வெற்றி சான்றிதழை தேர்தல் அலுவலர் முத்து சுந்தரம் வழங்கியுள்ளார். 

இதுகுறித்து கடந்த இரண்டு நாட்களாக வெற்றி அறிவிப்பு வெளியிட்டு, அதற்கான தகவல்கள் வாக்கு எண்ணிக்கை விவரம் வேண்டி புகார் அளித்தும் மனுவை ஏற்றுக் கொள்ளாத தேர்தல் அலுவலர் முத்துசுந்தரத்தை கண்டித்து இன்று திருப்பெரும்புதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காளியம்மாள் அருள்தாஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர்  தேர்தல் அலுவலர் முத்து சுந்தரத்தை முற்றுகையிட்டு, நீதி கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து விரைந்து வந்த திருப்பெரும்புதூர் காவல்துறையினர் தேர்தல் அலுவலர் முத்துசுந்தரத்தின் முன்னிலையில் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மறு வாக்கு எண்ணிக்கை கோரிய காளியம்மாள் அருள்தாஸ் மற்றும் அவருக்கு ஆதரவாக இரண்டாவது வார்டில் போட்டியிட்ட பானு குப்பன்  ஆகியோரின் புகாரை பெற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் தேர்தல் நடத்தும் அலுவலர் அதன் கட்டுப்பாட்டு அறையின் உள் அதிமுகவினர் உள்ளே நுழைந்து தேர்தல் அலுவலர் முத்துசுந்தரம் அருகில் இருந்து கொண்டு அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும் குற்றச்சாட்டு வைக்கின்றனர். 

தேர்தல் நடத்தும் அலுவலரான முத்துசுந்தரம் அதிமுகவினரின் துணையுடன் கையூட்டு பெற்றுக்கொண்டு தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் இதுபோன்ற பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டு வைக்கின்றனர். இதுகுறித்து தேர்தல் ஆணையர் மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக இவர் மீது நடவடிக்கை எடுத்து மறுவாக்கு எண்ணிக்கை நடத்துவதே என்று கோரிக்கை வைக்கின்றனர்.