சோதனையில் எதுவும் சிக்கவில்லை- முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் எந்த ஆவணங்களும் சிக்கவில்லை என்றும், எந்தவிதமான வழக்குகளையும் நீதிமன்றத்தில் சந்திக்க தயாராக இருப்பதாகவும், முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார்.

சோதனையில் எதுவும் சிக்கவில்லை- முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி, வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்திருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில், கே.சி.வீரமணியின் வீடு, அவரது உறவினர்கள், நண்பர்கள் வீடு என மொத்தம் 35 இடங்களில் லஞ்சம் ஒழிப்பு துறையினர் நேற்று சோதனை நடத்தினர்.

சுமார் 17 மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனையில், 34 லட்ச ரூபாய் ரொக்கப்பணம், சுமார் 5 கிலோ தங்க நகைகள், 47 கிராம் வைர நகைகள், 7 புள்ளி 2 கிலோ வெள்ளி பொருட்கள், 1 லட்சத்து 80 ஆயிரம் டாலர் பணம், 9 சொகுசு கார்கள், 5 கணினிகள், முக்கிய சொத்து ஆவணங்கள், வங்கி கணக்கு புத்தகங்கள் மற்றும் 30 லட்சம் மதிப்புள்ள மணலும் வீட்டு வளாகத்தில் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு போலீசாரின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சோதனை முடிந்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வெளியே சென்ற போது, கே.சி.வீரமணி வீட்டின் முன்பு குவிந்த அவரது ஆதரவாளர்கள் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளின் வாகனத்தை முற்றுகையிட்டு, அதிகாரிகள் அதிர்ந்து போகும் அளவிற்கு கையால் காரை தட்டி, தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். பின்னர் தொண்டர்கள் இடையே சிறிது நேரம் பேசிய கே.சி.வீரமணி, இது திட்டமிட்டு நடத்தப்பட்ட சோதனை என்றும், இந்த சோதனையால் திமுகவினர் விளம்பரம் தேடிக் கொண்டதாகவும் தெரிவித்தார்.

மேலும், இதுபோன்ற சோதனைகள் ஒன்றும் புதிது கிடையாது, அதிமுக இன்னும் நூறு ஆண்டுகாலம் நிலை நிற்கும் எனக் கூறிய அவர், லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் எந்த ஆவணங்களும் சிக்கவில்லை என்றும், எந்தவிதமான வழக்குகளையும் நீதிமன்றத்தில் சந்திக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.