கொரோனா தடுப்பூசிக்கு வரிதொடரும்... ஜி.எஸ்.டி. கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

கொரோனா தடுப்பூசிக்கு வரிதொடரும்...  ஜி.எஸ்.டி. கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

கருப்பு பூஞ்சை தொற்றுக்கான மருந்துக்கு வரியை ரத்து செய்ய ஜி.எஸ்.டி. கவுன்சில் முடிவு செய்துள்ளது. அதேநேரம் கொரோனா தடுப்பூசி மற்றும் மருத்துவ தளவாடங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரி தொடரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று வீரியமாக பரவி வரும் நிலையில், அதை தடுப்பதற்கான தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.  அதேநேரம் இந்த தடுப்பூசி மற்றும் அத்தியாவசிய சிகிச்சைக்கான மருந்துகள் மற்றும் தளவாடங்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டு இருப்பது நாடு முழுவதும் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. குறிப்பாக கொரோனா தடுப்பூசிக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்பட்டு உள்ளது. இந்த ஜி.எஸ்.டி.யை ரத்து செய்ய வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

இந்த நிலையில் சுமார் 8 மாதங்களுக்கு பிறகு முதல் முறையாக ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நேற்று நடைபெற்றது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநில நிதி அமைச்சர்களும் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பல்வேறு மாநில நிதி அமைச்சர்கள், தடுப்பூசி மற்றும் அத்தியாவசிய மருத்துவ உபகரணங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.டி.யை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஆனால் இந்த விவகாரத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. 

இது ஒருபுறம் இருக்க ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் மேலும் பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டன. இதில் முக்கியமாக கருப்பு பூஞ்சை தொற்றுக்கு அளிக்கப்பட்டு வரும் அம்போட்டரிசின்-பி மருந்து இறக்குமதிக்கு விதிக்கப்படும் ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிப்பது என முடிவு செய்யப்பட்டது. மேலும் கொரோனா தொடா்பாக வெளிநாடுகளில் இருந்து இலவசமாக இறக்குமதி செய்யப்படும் உபகரணங்களுக்கு ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி.யை ரத்துசெய்வது எனவும் முடிவு செய்யப்பட்டது.