நாமக்கல் : குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த வெள்ளம்...முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்கள்...!

நாமக்கல் : குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த வெள்ளம்...முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்கள்...!

கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஏற்கனவே மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 125 அடியை எட்டியதை அடுத்து காவிரியில் மேட்டூர் அணைக்கு வரும் நீர் அப்படியே திறந்து விடப்பட்டுள்ளது. 

இதனை அடுத்து கடந்த ஆடி மாதம் முதல் தற்போது வரை காவிரியில் நீர்வரத்து 50 ஆயிரம் கன அடிக்கு குறையாமல் சென்று கொண்டுள்ளது. நேற்றைய தினம் முதல் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் நீரானது அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனை அடுத்து காவிரி கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

நீர்வரத்து அதிகரிப்பால் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் கலைமகள்வீதி, மணிமேகலைவீதி, இந்திராநகர், அண்ணாநகர், பொன்னியம்மாள் சந்து உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனை அடுத்து பொதுமக்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேறி நகராட்சி நிர்வாகத்தினர் மற்றும் வருவாய்துறையினர் சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். இதுவரை 47 குடும்பங்களைச் சேர்ந்த 114 பேர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 

மேலும் காவிரியில்  நீர்வரத்து அதிகரிக்கப்படும் என்பதால் காவிரி கரையோர பகுதிகளில் பாதிப்பு அதிகரிக்ககூடும் என அஞ்சப்படுகிறது. தொடர்ந்து நான்காவது முறையாக காவிரியில் வெள்ளநீர் அதிகரித்துள்ளதாலும், காவேரி கரையோரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாலும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.