"ஆளுநர் ரவி, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பிரதிநிதி மற்றும் பா.ஜ.க வின் மிகச்சிறந்த தொண்டர்" முத்தரசன் பேச்சு!

"ஆளுநர் ரவி, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பிரதிநிதி மற்றும் பா.ஜ.க வின் மிகச்சிறந்த தொண்டர்" முத்தரசன் பேச்சு!

நீட் தேர்வால் தான் தகுதியான மருத்துவர்கள் உருவாவார்கள் என கூறுவது பொய் மட்டுமல்ல, திசை திருப்பும் கருத்து என முத்தரசன் தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், ஆளுநர் ரவி மசோதாவிற்கு ஒரு போதும் கையெழுத்திட மாட்டேன் எனக் கூறியது குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது  "ஆளுநர் ஆர்.என்.ரவி வகிக்கும் பொறுப்பு உயரிய பொறுப்பு. அந்த பொறுப்பிற்கு மேலும் பொறுப்பு சேர்க்கும் வகையில் ஆளுநர் செயல்படவில்லை. அவர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பிரதிநிதியாக, பா.ஜ.க வின் மிகச்சிறந்த தொண்டராக செயல்படுகிறார். அவர் ஆர்.எஸ்.எஸ் கொள்கையை ஏற்றுக்கொண்டுள்ளார். அவர் ஆளுநர் பொறுப்பிலிருந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறுவது தவறானது. நீட் எதிர்ப்பு தீர்மானம் என்பது சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம். இது தி.மு.க உள்ளிட்ட எந்த கட்சியின் பிரச்சனை அல்ல மாறாக இது பொது பிரச்சனை" என கூறியுள்ளார்.

மேலும், நாட்டிலேயே மிகச்சிறந்த மருத்துவர்களும், அதிக மருத்துவ கல்லூரிகளும் இருப்பது தமிழ்நாட்டில் தான். இங்கு பணியிலிருக்கும் சிறந்த மருத்துவர்கள் யாரும் நீட் தேர்வை எழுதவில்லை. உலக நாடுகளிலிருந்தும், இந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்தும் சிகிச்சை பெற தமிழ்நாட்டிற்கு தான் வருகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், நீட் தேர்வால் தான் தகுதியானவர்களை தேர்ந்தெடுக்க முடியும் என்பது அப்பட்டமான பொய் மட்டுமல்ல, திசை திருப்பும் நடவடிக்கை தான். நீட் தேர்வு மூலமாக பயன்பெறுபவது கோச்சிங் செண்டர்கள் தான் என்றும் குற்றம் சாற்றியுள்ளார்.

மேலும்," சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவின் மீது ஆளுநருக்கு மாற்று கருத்து இருக்குமேயானால் அது குறித்து விளக்கம் கேட்டு கடிதம் எழுதலாம் அல்லது முதலமைச்சரை நேரில் சந்தித்து பேசலாம். ஆனால் மசோதாவிற்கு கையெழுத்தே போட மாட்டேன் என்கிற அதிகாரத்தை அவருக்கு வழங்கியது யார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக போட்டி அரசாங்கத்தை ஆளுநர் நடத்தி வருகிறார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது" என்றும் கூறியுள்ளார்.

இதையும் படிக்க || தலைமறைவாக இருந்த செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் கைது!!