ஜெயலலிதாவின் சொத்துக்களை உடனடியாக பறிமுதல் செய்யக் கோரி மனு!

ஜெயலலிதாவின் சொத்துக்களை உடனடியாக பறிமுதல் செய்யக் கோரி மனு!

சொத்து குவிப்பு வழக்கில் தொடர்புடைய ஜெயலலிதாவின் பறிமுதல் செய்யப்படாத சொத்துக்களை உடனடியாக பறிமுதல் செய்து ஏலம் விட நடவடிக்கை எடுக்கக்கோரி கர்நாடக சட்டத்துறை தலைமை செயலாளரிடம் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து சொத்துக்களையும் உடனடியாக ஏலம் விட கர்நாடக அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்டிஐ ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி சட்ட போராட்டம் நடத்திய நிலையில் சொத்துக்களை ஏலம் விட அரசு தரப்பு வழக்கறிஞராக கிரண் எஸ் ஜவளி என்ற மூத்த வழக்கறிஞரை கர்நாடக சட்டத்துறை 27.3.2023 ஆம் தேதி நியமனம் செய்து அரசாணை வெளியிட்டது. இதன் தொடர்ச்சியாக சொத்துக்களை ஏலம் விட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டபோது ஜெயலலிதா சொத்துக்கு வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றத்திடம் பறிமுதல் செய்யப்பட்ட 30 கிலோ வெள்ளி, வைரம், வைடூரியம் போன்ற விலை உயர்ந்த ஆபரணங்கள் மட்டும் இருப்பதாக கடந்த ஜூன் மாதம் மூன்றாம் தேதி தெரிவிக்கப்பட்டது. 

பறிமுதல் செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான சேலைகள், செருப்புகள், கைகடிகாரங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் எங்கு உள்ளது? என்று கேள்வி எழுப்பி மீண்டும் நரசிம்மமூர்த்தி மனு தாக்கல் செய்திருந்தார். இதற்கு பதிலளித்த லஞ்ச ஒழிப்பு போலீசார் இந்த பொருட்கள் பறிமுதல் செய்யப்படவில்லை என்றும் 12.12. 96 ஆம் தேதி மேற்கொண்ட அனைத்து சொத்துக்களையும் தேவைப்படும் போது மீண்டும் நீதிமன்றத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜெயலலிதாவின் பணி செயலாளரான வி பாஸ்கரன் என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் சிறப்பு நீதிமன்றத்தில் 10.7.2023 ஆம் தேதி தெரிவித்தனர். இதை அடுத்து மீண்டும் பாஸ்கரிடம் ஒப்படைக்கப்பட்ட ஜெயலலிதாவின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை உடனடியாக நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிடக்கோரி நரசிம்மமூர்த்தி கர்நாடக சட்டத்துறை தலைமை செயலாளரிடம் மனு தாக்கல் செய்துள்ளார். 

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் தொடர்புடைய அனைத்து சொத்துக்களையும் உடனடியாக நீதிமன்றத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்து அதை கால தாமதம் இன்றி ஏலத்தில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிக்க:சென்னை மாநகராட்சி; காலியாகவுள்ள 2 வார்டுகளுக்கு அடுத்த மாதம் இடைத்தேர்தல்!