சைபர் கிரைமில் தினமும் ஆஜராக வேண்டும்... யூடியூபர் மாரிதாசுக்கு நிபந்தனை ஜாமீன்...

தனியார் தொலைக்காட்சி ஊழியர்கள் குறித்து அவதூறு பரப்பியதாக சென்னை சைபர் க்ரைம் போலீசாரால் கைது செய்யப்பட்ட மாரிதாசுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சைபர் கிரைமில் தினமும் ஆஜராக வேண்டும்... யூடியூபர் மாரிதாசுக்கு நிபந்தனை ஜாமீன்...

யூ-டியூபர் மாரிதாஸ் தனது யூ-டியூப் பக்கத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில் தனியார் தொலைக்காட்சி ஊழியர்கள் குறித்து தரக்குறைவாக பேசியதுடன், அந்நிறுவனத்தின் நிர்வாகி அனுப்பியதாக போலி மின்னஞ்சல் ஒன்றைக் காட்டியிருந்தார்.

இவ்விவகாரம் தொடர்பாக பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தைச் சேர்ந்த நிர்வாகி வினய் சரவோகி உள்ளிட்ட பாதிக்கப்பட்டோர் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வந்த சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார், மாரிதாசை கடந்த 11 ஆம் தேதி கைது செய்தனர்.

மாரிதாஸ் தரப்பில் ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அம்மனு மீதான விசாரணை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நேற்று விசாரிக்கப்பட்டது. விசாரணைக்குப் பின் மாரிதாசுக்கு மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் பிரிவு விசாரணை அதிகாரி முன்னிலையில் தினமும் ஆஜராகி ஒத்துழைக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கி எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.