அட திமுக மட்டுமா சொல்லுது? அவங்க  ஆளுநர் தமிழிசையே சொல்றாங்க... அமைச்சர் அதிரடி பேச்சு!!

கடந்த ஆட்சியில் கொரோனா நோயாளிகளுக்கு உணவு வழங்கியதில் பெருந்தகை இடைத்தரகர்களுக்கு சென்றது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

அட திமுக மட்டுமா சொல்லுது? அவங்க  ஆளுநர் தமிழிசையே சொல்றாங்க... அமைச்சர் அதிரடி பேச்சு!!

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அரசு மருத்துவமனை, போகலூர்ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றை பார்வையிட்டார். பின்பு மருத்துவத்துறை அதிகாரிகள் மற்றும் டாக்டர்களிடம் கொரனோ சிகிச்சைகள் குறித்தும், தடுப்பூசி போடுவது குறித்தும் கேட்டறிந்தார். 

பின்பு அமைச்சர் மா,சுப்பிரமணியன் பேட்டி அளிக்கையில் கூறியதாவது: தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கொரோனா ஆய்வுகள் குறித்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி இரண்டு மாதங்களில் 32வது மாவட்டமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்று மிக குறைந்த அளவில் வந்துள்ளது. தி.மு.க .ஆட்சிக்கு வந்தவுடன் 25 ஆயிரத்து 465 என்கின்ற பெரிய அளவில் தொற்று இருந்தது. பின்பு 36 ஆயிரத்து 154 ஆக உயர்ந்துள்ளது. அதற்காக அரசு தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று குறைகள் மாவட்டத்தில் ராமநாதபுரம் மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது.3,700 பேர் கரும் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு இருந்தாலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒருவர் மட்டும்தான் பாதிக்கப்பட்டுள்ளார். அவரும் நலம் பெற்று இல்லம் திரும்பியுள்ளார். 

ராமநாதபுரம் மாவட்டத்தில் மருத்துவ சேவை மிகச் சிறந்த முறையில் உள்ளது. கடந்த ஆட்சியில் மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் உணவு வழங்கிய வகையிலும், அவர்களுக்கு தங்கும் இடம் வழங்கிய வகையிலும், மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது என அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டது.தற்போது தி.மு.க. ஆட்சியில் நாள் ஒன்றுக்கு ரூ. 30 லட்சம் செலவு குறைக்கப்பட்டுள்ளது. இடைத்தரகர்கள் யாரும் இல்லாமல் தரமான முறையில் உணவுகள் மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் வழங்கப்படுகிறது. கடந்த ஆட்சியில் பெருந்தொகை இடைத்தரகர்களுக்கு சென்றது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

ஜிகா வைரஸ் என்பது டெங்கு காய்ச்சலை போன்றதுதான். அதற்கு தீவிரமாக கொசு மருந்து அடிப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளை தமிழக சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகிறது .உள்ளாட்சி அமைப்புகளும் இதுகுறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கன்னியாகுமரியில் ஒரு கர்ப்பிணித் தாய்க்கு அந்த வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது. தற்போது அவரும் பிரசவம் ஆகி குழந்தையோடு நலமுடன் உள்ளார். ஒன்றிய அரசை ஒன்றிய அரசு என்றுதான் அழைக்க வேண்டும்.தி.மு.க. மட்டும் ஒன்றிய அரசு என அழைக்கவில்லை. பா.ஜ.க.வை சேர்ந்த புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் கூட ஒன்றிய அரசு என்றுதான் கூறியுள்ளார். 

மாவட்ட மருத்துவ கல்லூரியும் மாவட்டமருத்துவமனையும் வெவ்வேறு இடங்களில் இருப்பது தான் நல்லது. அதற்காகத்தான் இந்த ஆய்வு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.தேசிய சுகாதார மேலாண்மை இயக்குனர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் கலந்து பேசி ஆய்வுக்கு பிறகு  பொது மருத்துவமனைகுறித்து முடிவு செய்யப்படும். 11 புதிய மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை நடப்பது குறித்து ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சரிடம் ஒரு வார காலத்திற்குள் பேச உள்ளோம். அவரிடம் பேசி முடிவெடுத்து பின்பு மாணவர் சேர்க்கை நடைபெறும் என இவ்வாறு கூறினார்.