"டெங்குவைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை"  மேயர் பிரியா அறிவிப்பு!

சென்னையில் டெங்கு நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த மாநகராட்சி சார்பில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக சென்னை பெருநகர மாநகராட்சி மேயர் பிரியா பேட்டிளித்துள்ளார். 

தமிழகம் முழுவதும் 1000 பகுதிகளில் டெங்கு மற்றும் மழைக்கால நோய் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம் இன்று தொடங்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை மாநகராட்சி சார்பில் சென்னை பட்டினம் பாக்கம் மெரினா லூப் சாலையில் டெங்கு மற்றும் மழைக்கால நோய் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாமை சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் துணை மேயர் மகேஷ் குமார் ஆகியோர் இன்று தொடங்கி வைத்தனர். இந்த மருத்துவ முகாமில் டெங்கு பரிசோதனை மேற்கொண்டு பொதுமக்களுக்கு மருந்து வழங்கப்பட்டது.

குறிப்பாக, இந்த நிகழ்ச்சியின் பொழுது டெங்கு மற்றும் மழைக்கால நோய் பரவல்களை தடுப்பது குறித்தும் டெங்கு மற்றும் மழைக்கால நோய் எவ்வாறு பொதுமக்களுக்கு பரவுகிறது என்பதை குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டு பொதுமக்கள் விழிப்புடன் செயல்படவும் சென்னை மாநகராட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டது.

இதன் இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சென்னை பெருநகர மாநகராட்சி மேயர் பிரியா கூறுகையில்,  "இன்று தமிழ்நாடு முழுவதும் ஆயிரம் சிறப்பு மருத்துவ முகாம் துவங்கப்பட்டுள்ளது. இன்றைய காலகட்டத்தில் டெங்கு காய்ச்சல் போன்ற நோய் அதிகமாக பரவி வருகிறது. சென்னை பெருநகர மாநகராட்சி சார்பில் மண்டலம் ஒன்றிலிருந்து 15 வரை மூன்று மருத்துவ முகாம்கள் என்று சென்னையில் மட்டும் இன்று 45 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. 

இந்த மருத்துவ முகாமில் பொதுமக்கள் அனைவரும் சென்று பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சென்னையில் ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இதில் ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 581 பேர் பயனடைந்துள்ளனர். தற்பொழுது பரவி வரக் கூடிய டெங்கு காய்ச்சல் தொடர்பான போதிய விழிப்புணர்வு மக்களிடையே இல்லை. 

டெங்கு விழிப்புணர்வு தொடர்பாக சென்னை மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வீடுகள் அருகே பிடித்து வைக்கக்கூடிய நன்னீர் மூலமாகவே டெங்கு காய்ச்சல் பரப்பக்கூடிய கொசுக்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. எனவே பொதுமக்கள் தாங்கள் பிடித்து வைத்திருக்கக்கூடிய உடனுக்குடன் பயன்படுத்தி சுத்தம் செய்து வைக்குமாறு பொதுமக்களுக்கு தொடர்ந்து அறிவுரை வழங்கி வருகிறோம்.

சென்னையில் டெங்கு காய்ச்சல் காரணமாக 75 நபர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த ஆண்டு முழுவதுமாக 346 நபர்கள் டெங்கு காய்ச்சலுக்கு பாதிப்பு அடைந்துள்ளனர். சென்னை மாநகராட்சி சார்பில் கொசு மருந்து தெளிக்கும் பணியானது தீவிரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக காலை மற்றும் மாலை என இரு வேலைகளும் பல்வேறு பகுதிகளில் கொசு மருந்து தெளிக்கும் பணியானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

தெருவோரங்கள் மட்டுமின்றி கொசுக்கள் அதிக உற்பத்தியாக கூடிய பகுதிகளிலும் அதிக கவனம் கொண்டு சென்னை மாநகராட்சி சார்பில் டெலிப்பான் கொண்டு மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருந்தும் பொதுமக்களும் இதற்கு ஒத்துழைப்பு வழங்கினால் மட்டுமே டெங்கு நோய் தொற்றை கட்டுக்குள் கொண்டு வர முடியும்" எனக் கூறினார். 

இதையும் படிக்க: குன்னூர் விபத்து பிரதமர் குடியரசுத் தலைவர் இரங்கல்!