தொடங்கியது மாம்பழ சீசன்... குவியும் வியாபாரிகளால் மகிழ்ச்சியில் மா விவசாயிகள்!

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதியில் மாங்காய் அறுவடையாகி வரும் நிலையில்,  வியாபாரிகள் அதிகளவில் வரத் தொடங்கி இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடங்கியது மாம்பழ சீசன்... குவியும் வியாபாரிகளால் மகிழ்ச்சியில் மா விவசாயிகள்!

நத்தம் சுற்று வட்டாரப் பகுதிகளான பரளி, வத்திப்பட்டி, லிங்கவாடி, காசம்பட்டி, உலுப்பகுடி, பட்டணம்பட்டி, புதுப்பட்டி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் மா சாகு படி செய்யப்பட்டுள்ளது. இங்கு காசா, கல்லாமை, அல்ஃ‌போன்சா, செந்தூரம், மல்கோவா, இமாம்பசந்த் உள்ளிட்ட பல்வேறு மாம்பழங்கள் விளைகின்றன.

பொதுவாக மாசி மாதம் பூக்கள் பூத்து மே, ஜுன் மாதம் மாம்பழ சீசன் தொடங்குவது வழக்கம். அந்தவகையில் கடந்த மார்ச் மாதம் பூக்கள் பூக்க தொடங்கி தற்போது மாம்பழங்கள் விளைந்து அறுவடை செய்யப்பட்டு வருகிறது. சீசன் தொடங்கியதையடுத்து நத்தம் பகுதியில்  பல்வேறு இடங்களில் மாங்காய் மண்டிகள் திறக்கப்பட்டுள்ளது. வெளிமாநிலங்களுக்கும் மொத்தமாக மாங்காய்கள் அனுப்பப்பட்டு வருகிறது.

இன்றைய நிலவரப்படி கல்லாமை ரகம் கிலோ 15 முதல் 25 ரூபாய் வரையிலும், பாலாமணி ரகம் 40 முதல் 60, செந்தூரம் 25 முதல் 48, இமாம்பசந்து 80 முதல் 120 ரூபாய் வரை விலை போகிறது. சில்லரை விலையில் கிலோவிற்கு 40 முதல் 150 வரை விற்பனையாகிறது.

சீசன் தொடங்கி விட்டாலும்  50 சதவீத மாங்காய்கள் மட்டுமே தற்போது காய்த்துள்ளது. ஆனாலும் மாம்பழங்களை வாங்க பல்வேறு மாவட்டங்களில் இருந்தும்  வியாபாரிகள் குவிந்து வருவதால் மா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.