சொகுசு காரில் ஹெல்மெட் அணியாமல் சென்ற நபருக்கு ரூ 1000 அபராதம்!

தென்காசி அருகே சொகுசு காரை ஹெல்மெட் அணியாமல் ஓட்டிச்சென்றதாக கூறி ஒருவருக்கு அபராதம் விதித்துள்ளது காவல்துறை.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள சேர்ந்தமரம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவருடைய செல்போனுக்கு, ஹெல்மெட் அணியாமல் சென்று போக்குவரத்து விதியை மீறியதாக கூறி ரூ1000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது.

இதைக் கண்டு திடுக்கிட்ட சுரேஷ், ஆராய்ந்து பார்த்ததில், அந்த அபராதம் தனது சொகுசு காருக்கு விதிக்கப்பட்டிருப்பதை அறிந்து மேலும் அதிர்ச்சியடைந்துள்ளார். சொகுசு காரில் செல்லும் நபர் ஹெல்மெட் அணியவில்லை என அபராதம் விதித்திருந்தது திடுக்கிட வைத்தாலும், இதில் மேலும் ஒரு வேடிக்கை உள்ளது.

அது என்னவென்றால், அவர் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக கூறிய அந்த நாளன்று, அவர் சங்கரகோவில் பக்கம் போகவே இல்லையாம். இது குறித்து பேசிய சுரேஷ், அபராதம் விதிக்கப்பட்டுள்ள நாளன்று தான் சங்கரன்கோவில் பகுதிக்கு கார் ஓட்டிச் செர்ல்லவே இல்லை, ஆனால் சங்கரன் கோவில் தாலுகா காவல் துறையினர் என்னுடைய கார் எண்ணிற்கு தலைக்கவசம் அணியவில்லை என ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். இது குறித்து மாவட்ட காவல் கண்கானிப்பாளரை அணுகி புகார் அளிக்கவுள்ளேன் என மனா உளைச்சலுடன் தெரிவித்துள்ளார்.

வாகன சோதனை என்ற பெயரில், காவல்துறையினர் கணக்கு காண்பிப்பதற்காக ஏதாவது ஒரு வாகனத்திற்கு அபராதம் விதிகின்றனர் என பொதுமக்கள் கூறிவரும் நிலையில், சொகுசு காரை தலைக்கவசம் அணியாமல் ஓட்டியதாக கூறி அபராதம் விதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.