6 வருடங்களுக்கு பிறகு முழு கொள்ளளவை எட்டிய மாமண்டூர் ஏரி... மலர் தூவி வரவேற்ற விவசாயிகள்...

திருவண்ணாமலை மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியான மாமண்டூர் ஏரி 6 வருடங்களுக்கு பிறகு அதன் முழு கொள்ளளவை எட்டியது. 

6 வருடங்களுக்கு பிறகு முழு கொள்ளளவை எட்டிய மாமண்டூர் ஏரி... மலர் தூவி வரவேற்ற விவசாயிகள்...

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த மாமண்டூர் ஏரி 6 வருடங்களுக்கு பிறகு அதன் முழு கொள்ளளவை எட்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். உபரி நீர் வெளியேறும் காட்சிகளை சுட்டுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பார்த்து ரசித்து செல்கின்றனர்.

ஏரி முழு கொள்ளவை எட்டியதால் செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் நேரில் சென்று பார்வையிட்டு மலர் தூவி பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். வெம்பாக்கம் தாலுக்காவில் அமைந்துள்ள இந்த மாமண்டூர் ஏரி திருவண்ணாமலை மாவட்டத்திலேயே பெரிய ஏரியாகும். இந்த மாமண்டூர் ஏரி கி.பி.6-ம் நூற்றாண்டில் மகேந்திர பல்லவன் காலத்தில் உருவாக்கப்பட்டது. 

இயற்கையாக அமையப்பட்ட இரண்டு குன்றுகளுக்கிடையே கரை கட்டப்பட்டு மொத்தம் 13.88 சதுர கிலோமீட்டர் பரப்பளவு உள்ள மாமண்டூர் ஏரியின் நீரின் மொத்த கொள்ளளவு 1798 மில்லியன் கன அடியாகும். 30.2 அடி நீர்மட்ட உயரம் கொண்ட ஏரியில் நீர் தற்போது அதன் முழு கொள்ளவை எட்டி ஏரியின் உபரி நீர் கலங்கல் வழியாக வெளியேறி வருகிறது. 

ஏரி முழு கொள்ளளவை அடைந்ததும் உபரி நீர் வெளியேற தொடங்கியது இதனை வரவேற்கும் நிகழ்வாக செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஒ.ஜோதி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் பார்வதி சீனிவாசன் ஆகியோர் ஏரியின் உபரி வெளியேறும் பகுதியில் நீரரில் புது துணிகளை நீரில் விட்டும், கற்பூரம் ஏற்றி மலர் தூவி வரவேற்று மகிழ்ந்தனர்.

மாமண்டூர் ஏரியால் தூசி, குரங்குணில்முட்டம், பல்லாவரம், கனிகிலுப்பை, மாமண்டூர், வடகல்பாக்கம், வாழவந்தல், திரிஞ்சாபுரம், மேனல்லூர், பூனைத்தாங்கல், சோதியம்பாக்கம், பகவந்தபுரம், ஏழாச்சேரி உள்ளிட்ட 55 க்கும் மேற்பட்ட கிராமங்கள் என 4118 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. 

வடகிழக்கு பருவமழையால் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையாலும் செய்யாறு தாலுக்காவில் பொதுப்பணித்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள 215 ஏரிகள் மற்றும் ஊரகவளர்ச்சித்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள 190 ஏரிகள் என மொத்தம் 405 ஏரிகளில் சுமார் 60 சதவிகித ஏரிகள் முழுமையாக நிரம்பியிருக்கிறது. முற்றவை வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால் விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.