ஓபிஎஸ் மனைவி விஜயலட்சுமியின் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்...

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்-ன் மனைவி விஜயலட்சுமியின் மறைவுக்கு, தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஓபிஎஸ் மனைவி விஜயலட்சுமியின் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்...

ஒ. பி.எஸ்-ன் மனைவி காலமானதை அறிந்ததும் மருத்துவமனைக்கு நேரில் சென்று, ஓ. பி.எஸ்-க்கு ஆறுதல் கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இல்லத்துணையைப் பிரிந்து வாடும் அண்ணன் ஓ.பன்னீர்செல்வத்திற்கும், அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதாக, தனது இரங்கல் அறிக்கையில் கூறியுள்ளார்.

தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு சகோதரியின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

துணைவியாரை இழந்து துயருறும் ஓ. பி.எஸ். மற்றும் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதாகவும், புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தனது இரங்கல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தேமுதிக நிறுவனத்தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், அனைவரிடமும் அன்பாக பழகும் தன்மை கொண்ட ஓ.பன்னீர்செல்வத்தின் வெற்றிக்குப் பக்கபலமாக இருந்தவர் அவரது மனைவி விஜயலட்சுமி என்றும், அவரைப் பிரிந்து வாடும் ஓ. பி.எஸ். குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப் பிட்டுள்ளார். 

மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன், மிக சாதாரணமான குடும்பத்தில் இருந்து தமிழகத்தின் முதலமைச்சர் நாற்காலியில் அமரக் கூடிய அளவிற்கு திறமை படைத்த ஓ. பி.எஸ்-க்கு துணையாக நின்றவர் அவரது மனைவி விஜயலட்சுமி என்றும், இன்னும் 10 ஆண்டுகள் வாழ்ந்திருக்க வேண்டியவரின் திடீர் மரணம் அதிர்ச்சியைத் தருவதாக தெரிவித்துள்ளார்.

ஆயிரம் கருத்து வேறுபாடுகள் அரசியலில் இருந்தாலும், தனிப்பட்ட முறையில் அனைவரிடமும் அன்பு பாராட்டி வரும் ஓ.பன்னீர்செல்வத்தின் தொண்டு, இந்த சமூகத்திற்கு கிடைப்பதற்கு, தனது குடும்பத்தை பார்த்துக்கொண்டு உதவி புரிந்த அவரது மனைவியின் மறைவுக்கு, ஆறுதலை தெரிவித்து கொள்வதாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சென்று ஆறுதல் கூறிய நிலையில், தனது இரங்கல் அறிக்கையில், வாழ்க்கைத்துணையை இழந்து பெரும் துயருற்றுள்ள ஓ.பன்னீர்செல்வம், தாயை இழந்து வாடும் ரவீந்திரநாத் குமார், ஜெய பிரதீப், கவிதா ஆகியோரது துயரத்தில் பங்கெடுத்துக் கொள்வதாக குறிப் பிட்டுள்ளார்.

நேரில் சென்று ஆறுதல் கூறிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்திற்கு உறுதுணையாக இருந்த அவரது மனைவி விஜயலட்சுமி, இல்லத்திற்கு சென்றால் இன்முகத்தோடு வரவேற்பார் என்றும் தெரிவித்துள்ளார்.