கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படுமா..? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய ஆலோசனை...

தமிழகத்தில் ஒமிக்ரான் தடுப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படுமா..? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய ஆலோசனை...

இந்தியாவில் ஒமிக்ரான் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத், தமிழ்நாடு, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.  இதுவரை 250-க்கும் மேற்பட்டோருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதியாகி உள்ளது. அதிகபட்சமாக, மகாராஷ்டிராவில் 65 பேருக்கும், டெல்லியில் 64 பேருக்கும் ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே தமிழகத்தில் மேலும் 33 பேருக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே நைஜீரியாவில் இருந்து வந்த ஒருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதியான நிலையில், தற்போது தமிழகத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 34ஆக உயர்ந்துள்ளது. இதனால் இந்தியாவில் டெல்லி, மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை 11.30 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தலைமையில் ஆலோசனை நடைபெற உள்ளது. ஒமிக்ரான் தடுப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனையின்போது, கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை தீவிரப்படுத்துவது, கட்டுப்பாடு விதிப்பது போன்றவை தொடர்பாக ஆலோசிக்கப்படவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.