”உச்சநீதிமன்ற தீர்ப்பை கர்நாடகா அமல்படுத்த வேண்டும்” - துரைமுருகன்

காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை அமல்படுத்த உச்சநீதிமன்றம் ஆணையிட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று அமைச்சர் துரை முருகன் தெரிவித்துள்ளார். 

சென்னை கோட்டூர்புரத்தில் நீர் வளத்துறை அமைச்சர் துரை முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை அமல்படுத்த உச்சநீதிமன்ற உத்தரவிட்டிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும்,  இதனை கர்நாடக அரசு அமல்படுத்தவில்லை என்றால் நீதிமன்ற அவமதிப்புக்கு ஆளாக நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுத்தார். 

காவிரி விவகாரத்தில் சட்ட ரீதியாக சென்று கொண்டிருக்கும் போது, பேச்சுவார்த்தை நடத்துவது சரியாக இருக்காது என்று கூறிய துரைமுருகன், உச்சநீதிமன்ற உத்தரவை கர்நாடக அரசு கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார்.  

இதனிடையே, கர்நாடக அமைச்சர் சரவணபசப்பா தர்ஷனாபுரா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு, கர்நாடகம் இடையே மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி தீர்த்து வைக்க வேண்டும் என்றும், உச்சநீதிமன்றம் நீர் திறப்பு குறித்த வழிகாட்டுதல்களை தெரிவித்துள்ளது அதனை பின்பற்றி செயல்படுவோம் என்றும் தெரிவித்தார்.