தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட ஒன்பது வயது சிறுமி...! மருத்துவ செலவுக்கு உதவ அரசுக்கு கோரிக்கை...!

காரைக்காலில் ஒன்பது வயது சிறுமிக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட தசை சிதைவு நோயால் இரண்டு கால்கள் செயலிழந்து போனதால் சிறுமியின் மருத்துவ செலவுக்காக புதுச்சேரி அரசிடம் பெற்றோர்கள் கோரிக்கை.

தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட ஒன்பது வயது சிறுமி...! மருத்துவ செலவுக்கு உதவ அரசுக்கு கோரிக்கை...!

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த டி.ஆர் பட்டினம் மீனவ கிராமத்தில் வசித்து வருபவர் சதீஷ். இவர் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இதில் முதல் பெண் குழந்தை நதினா அரசு பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு ஒன்பது வயது ஆகிறது. இச்சிறுமிக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தசை சிதைவு நோயால் இரண்டு கால்களும் செயலிழந்து போனதால் நடக்க முடியாமல் இருந்தது. 

இதனை அடுத்து சிறுமியின் பெற்றோர்கள் பல்வேறு அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் இதுவரை சிறுமிக்கு ஏற்பட்ட தசை சிதைவு நோய் சரி செய்ய முடியாத நிலை தொடர்வதால், மேல் சிகிச்சைக்கு கொண்டு செல்வதற்கு தங்களிடம் நிதி இல்லாததால் நிதி உதவி கேட்டு அரசுக்கு சிறுமியின் பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

மேலும் இதுகுறித்து சிறுமியின் பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியர் முகமது மன்சூர் அவர்களை சந்தித்து கோரிக்கை விடுத்தனர். இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்தார். மேலும் தசை சிதைவு நோயால் இரண்டு கால்கள் செயலிழந்து போனதால் பள்ளிக்கு செல்ல மிகுந்த சிரமமாக உள்ளதாகவும், தங்களுக்கு அரசு உடனடியாக உதவி செய்து மீண்டும் பள்ளிக்கு செல்ல அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிறுமி பெற்றோர்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.