அண்ணாமலையை அவர் சார்ந்த கட்சியாவது திருத்துமா? கேள்வி எழுப்பிய கே.பாலகிருஷ்ணன்!

அண்ணாமலையை அவர் சார்ந்த கட்சியாவது திருத்துமா? கேள்வி எழுப்பிய கே.பாலகிருஷ்ணன்!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தான் ஒரு தலைவர் பொறுப்பில் இருப்பதை மறந்து தான்தோன்றி தனமாக கூச்சல் எழுப்புவது கண்டிக்கத்தக்கது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்,

செய்தியாளர்களிடம் ஆவேசம் காட்டிய அண்ணாமலை:

முன்னதாக, நேற்று சென்னையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது, பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் செய்தியாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்காமல் ஆவேசமடைந்த அண்ணாமலை, செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டவர்களின் பெயர், எந்த சேனல் என்பது குறித்த விவரங்களைக் கூறினால்தான் பதில் அளிப்பேன் என்று கூறியது சர்ச்சைக்குள்ளானது.

கே.பாலகிருஷ்ணன் ட்வீட்:

இந்நிலையில் செய்தியாளர்களிடம் கடுமையாக நடந்து கொண்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் செயலை கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துக்களை பகிர்ந்துள்ளார். 

இதையும் படிக்க: மாரடைப்பால் உயிரிழந்த திருமகன் ஈவேராவின் உடல் தகனம்...!

வம்பு வளர்க்கும் அண்ணாமலை:

அதில், பாஜக தலைவர் அண்ணாமலை, பத்திரிக்கையாளர்களிடம் முதிர்ச்சியற்று  நடந்துகொண்டதை பார்த்தேன். பாஜகவில் இருந்தவரான காயத்திரி ரகுராம் உள்ளிட்ட பலரும் எழுப்பியிருக்கும் குற்றச்சாட்டுகள் - பாஜகவில் செயல்படும்  பெண்களுக்கு எதிரான ஒழுக்கக் கேடு தொடர்பானவை மட்டுமல்ல, சட்டப்படி கிரிமினல் நடவடிக்கைக்கு உரியவை. அது பற்றி ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு நாகரீகமான முறையில் பதில் கொடுத்திருக்க முடியும். ஆனால் அதனை விடுத்து எதை எதையோ பேசி வம்பு வளர்த்திருப்பது உறுத்தலாக இருக்கிறது. 

ரஃபேல் வாட்ச்:

சில நாட்கள் முன்பு அவர் கட்டியிருக்கும் கைக் கடிகாரம் எப்படி வாங்கப்பட்டது என்ற கேள்வி வந்தது. இந்த தேதியில், இவ்வாறு வாங்கினேன் என்று எளிதாக பதில் சொல்லியிருக்க முடிந்த கேள்விதான் அது. ஆனால் சம்பந்தமே இல்லாமல் விமானத்தின் பாகங்களில் செய்த கடிகாரம், இதை கட்டுவதுதான் தேச பக்தி என்று எதையெதையோ கதைகட்டினார்.

அடிப்படை நாகரீகம் இல்லாத அண்ணாமலை:

ஆன்லைன் ரம்மி தடைச்சட்டம், மாநில கல்வி நிறுவனங்களின் முடிவில் மூக்கை நுழைத்தல், நிதி ஒதுக்கியும் கட்டுமானப் பணிகள் தொடங்காத மதுரை எய்ம்ஸ், அதலபாதாளத்தில் நாட்டின் பொருளாதாரம் என்று அடுக்கடுக்கான கேள்விகளை அவரிடம் எழுப்ப வேண்டியுள்ளது. 

மத்திய அரசில் இருக்கிறோம் என்ற பொறுப்பே இல்லாமல், அடிப்படை நாகரீகமும் இல்லாமல் தான்தோன்றித்தனமாக கூச்சல் எழுப்புவது மக்களின் அறிந்துகொள்ளும் உரிமையை‌ காலில் போட்டு மிதிப்பதாகும். ஊடகங்களை மிரட்டியும், உருட்டியும் வரும் போக்கினை பத்திரிக்கையாளர் சங்கங்கள் பல முறை கண்டித்துள்ளன. அவர்‌ திருந்தவில்லை. அவர் சார்ந்துள்ள கட்சியாவது திருத்துமா? என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.