நடிகர் சூரி வீட்டு திருமண விழாவில் நகை திருட்டு- மர்ம நபருக்கு வலைவீச்சு

மதுரையில் பிரபல சினிமா நடிகர் சூரியின் அண்ணன் மகள் திருமண நிகழ்ச்சியில் 10 பவுன் தங்க நகைகள் திருடு போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

நடிகர் சூரி வீட்டு திருமண விழாவில் நகை திருட்டு- மர்ம நபருக்கு வலைவீச்சு

மதுரை சிந்தாமணி பைபாஸ் ரோட்டில் வேலம்மாள் மருத்துவமனைக்கு சொந்தமான திருமண மண்டபம் உள்ளது. இங்கு கடந்த 9-ம் தேதி நகைச்சுவை நடிகர் சூரியின் உறவினர் இல்ல திருமணம் நடந்தது. இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நடிகர் சூரி உள்பட திரையுலக பிரபலங்கள் பலரும் வந்திருந்தனர்.

அப்போது யாரோ மர்ம நபர்கள் மணமகள் அறைக்குள் புகுந்து அங்கிருந்த 5 பவுன் செயின், 3 பவுன் தங்க நெக்லஸ், 2 பவுன் பிரேஸ்லெட் ஆகியவற்றை திருடி சென்றுள்ளனர். இது தொடர்பாக திருமண மண்டப மேலாளர் சூரியபிரகாஷ் (வயது 47) என்பவர் கீரைத்துறை குற்றப்புலனாய்வு பிரிவு போலீசில் புகார் செய்தார். 

இதனடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் வழக்கு பதிவு செய்து, திருமண மண்டபத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்.