ஆசிய விளையாட்டு போட்டி ஒரே நாளில் 3 தங்கம் வென்ற இந்தியா!

ஆசிய விளையாட்டு போட்டியில், இந்திய அணி ஒரேநாளில் 3 தங்கம் உட்பட 5 பதக்கங்களை கைப்பற்றி உள்ளது. 

சீனாவின் ஹாங்சோங் நகரில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள், கடந்த 23ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வியாழக்கிழமை நடைபெற்ற ஆடவர் வில்வித்தை  காம்பவுண்டு பிரிவு இறுதிப்போட்டியில், இந்தியாவின் பிரவீன் ஓஜஸ், அபிஷேக் வர்மா மற்றும் பிரதமேஷ் ஜவகர் ஆகியோர் அடங்கிய அணி, 235 க்கு 230 என புள்ளிக்கணக்கில் தங்கப்பதக்கத்தை வென்றது.

இதேபோல், வில்வித்தை  மகளிர் குழு பிரிவின் இறுதிப் போட்டியில், இந்தியா - சீன தைபே அணிகள் மோதின. இதில் ஜோதி சுரேகா, அதிதி கோபிசந்த், பிரணித் கவுர் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 230 க்கு 228 என்ற புள்ளிகள் கணக்கில் தங்கம் வென்றது.

ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் மலேசிய அணியை வீழ்த்தி இந்தியா தங்கம் வென்றது. இந்தியாவின் தீபிகா பல்லிக்கல், ஹரிந்தர் பால் சிங் இணை 8 க்கு 3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றது.

இதேபோல் ஆடவர் ஸ்குவாஷ் பிரிவில் இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்துள்ளது. இந்திய வீரர் சவுரவ் கோசல் இறுதி போட்டியில் மலேசிய வீரரிடம் 1-3 என்ற கணக்கில தோல்வி அடைந்து வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார்.

மகளிருக்கான மல்யுத்தப்போட்டியின் 53 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் ஆன்டிம் பங்கால் வெண்கலம் வென்றார். இதன் மூலம், இந்திய அணி 21 தங்கம், 33 வெள்ளி, 32 வெண்கலம் என மொத்தம் 86 பதக்கங்களை வென்று, பதக்கப்பட்டியிலில் 4-வது இடத்தில் நீடிக்கிறது.

இதையும் படிக்க: "காவிரியில் தண்ணீர் பெற்றுத்தர தி.மு.க அரசுக்கு திராணி இல்லை" - முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்