மாற்றுத் திறனாளிகள் விபத்து நிவாரணம் 2 லட்சமாக உயர்வு!

மாற்றுத் திறனாளிகள் விபத்து நிவாரணம் 2 லட்சமாக உயர்வு!

மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தின் வாயிலாக வழங்கப்பட்டு வரும் விபத்துக்கான நிவாரணத் தொகை உயர்த்தி வழங்குவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தின் வாயிலாக வழங்கப்பட்டு வரும் விபத்துக்கான நிவாரணத் தொகை,  மருத்துவம், கல்வி மற்றும் இதர உதவித்தொகையினை 2023-2024 ஆண்டு முதல் உயர்த்தி வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

அவ்வறிக்கையில் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதலமைச்சர் முக ஸ்டாலின், மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தின் வாயிலாக வழங்கப்பட்டு வரும் விபத்துக்கான நிவாரணத் தொகை,  மருத்துவம், கல்வி மற்றும் இதர உதவித்தொகைக்கு மேலும் 2 கோடி ரூபாய் உயர்த்தி அளிக்கப்படும் என அறிவித்ததை செயல்படுத்தும் விதமாக இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அரசாணையின் படி,  விபத்தினால் இறக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் ஒரு லட்ச ரூபாய் நிவாரணத்தொகை, இரண்டு லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி கை அல்லது கால் இழப்பு, இரு கண்பார்வை இழப்பு ஏற்பட்டால் வழங்க்கப்படும் நிவாரணத்தொகை ஒரு லட்சத்திலிருந்து இரண்டு லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

மாற்றுத்திறனாளிகள் மகன் மற்றும் மகள் கல்வி பயில வருடாந்திர உதவித்தொகையையும் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு பயிலும் மகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ஆயிரத்திலிருந்து இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 12ம் வகுப்பு பயிலும் மகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகை 1500ல் இருந்து 2 ஆயிரமாக உயர்த்தி  அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், விடுதியில் தங்கி பயிலும் மகன், மகளுக்கு வழங்கப்படும் நிவாரணத்தொகை 1200-லிருந்து 2500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க:நீதிமன்றத்தில் அம்பேத்கர் படம் நீக்கம்; உயர் நீதிமன்ற உத்தரவிற்கு வைகோ கண்டனம்!