" தமிழகத்தில் தொழில்துறையை முடக்கும் திறனற்ற திமுக அரசு" - அண்ணாமலை குற்றச்சாட்டு.

" தமிழகத்தில் தொழில்துறையை முடக்கும் திறனற்ற திமுக அரசு" - அண்ணாமலை குற்றச்சாட்டு.

தமிழகத்தில் தொழில்துறையை முடக்கும் திறனற்ற திமுக அரசு  என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சாடியுள்ளார். 

தமிழகத்தில், கோவை, திருப்பூர் போன்ற மாவட்டங்களில் பெருமளவில் உள்ள ஸ்பின்னிங் மில்கள் மற்றும் ஓப்பன் எண்ட் ஸ்பின்னிங் மில்கள், அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்கி, மாநிலத்தின் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. தமிழகத்திலிருந்து சென்ற ஆண்டு மட்டும் சுமார் 8 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலினாலான நூல், நூலாடைகள் மற்றும் துணி பொருட்கள் ஏற்றுமதி நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

கோவை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்கள், ஜவுளித் தொழிலில் இந்தியாவிலேயே குறிப்பிடத்தகுந்த இடம் பிடித்திருக்கின்றன. ஆனால், திறனற்ற திமுக பதவியேற்றதிலிருந்து, தமிழகத்தின் தொழில்துறை தடுமாறத் தொடங்கியிருக்கிறது. திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையால், தொழிற்துறை மட்டும் அதனைச் சார்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தினம் தினம் அவதிப்பட்டு வருகின்றனர்.
 
நூற்றுக்கணக்கான போலி வாக்குறுதிகள் கொடுத்து ஆட்சிக்கு வந்த திமுக, வாக்குறுதிகளுக்கு நேர்மாறாக, தொடர்ந்து பல்வேறு கட்டண உயர்வுகளைக் கொண்டு வந்து, எளிய மக்கள் வயிற்றில் அடித்திருக்கிறது. மின்சாரக் கட்டண உயர்வு காரணமாக, கோவை மற்றும் திருப்பூரில் உள்ள மில்கள், இரண்டாவது நாளாக வேலை நிறுத்தத்தைத் தொடர்கின்றன. தினமும் 1500 டன் நூல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை பருத்தி பேலின் விலை உயர்வும் மின்சாரக் கட்டண உயர்வும் கேள்விக்குறியாக்கியிருக்கிறது. 
 
சிறு, குறு நடுத்தர மில்களுக்கு, ஒரு கிலோ வாட் மின்சாரத்திற்கு டிமாண்ட் சார்ஜ் ரூபாய் 35 ஆக இருந்த கட்டணம், கிட்டத்தட்ட ஐந்து மடங்காக, ரூபாய் 153 ஆக உயர்த்தி, ஆலையை இயக்கினாலும் இயக்கவில்லை என்றாலும், மாதம் ரூபாய் 17,200 கட்டணம் செலுத்தியே ஆக வேண்டும் என பகல் கொள்ளையை நடத்தி வருகிறது . இந்தக் கட்டண உயர்வைக் குறைக்கக் கோரியும், காலை மற்றும் மாலை வேளைகளில் 6 -  10 மணி நேரத்தில் மில்களை இயக்கினால், பீக் ஹவர்ஸ் கட்டணம் 15% அதிகம் வசூலிப்பதை நீக்கவும்,  மேலும் பல கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்த வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது.

பீக் ஹவர் கட்டணத்தை நிர்ணயிக்கத் தேவையான ஸ்மார்ட் மீட்டர்களை பொருந்தாமல் பீக் ஹவர் மின்சார பயன்பாட்டை எவ்வாறு கணக்கிடுகிறது இந்த திறனற்ற திமுக அரசு. சமீபத்தில் மத்திய அமைச்சர் திரு ஆர் கே சிங் அவர்கள், சூரிய சக்தி மின்சாரம் ஒவ்வொரு மாநிலமும் வழங்கி அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் காலை நேர மின்சார கட்டணத்தை குறைக்கவேண்டும் என்றும் பீக் ஹவர் மின்சார பயன்பாட்டை கணக்கிட ஸ்மார்ட் மீட்டர்களின் அவசியத்தையும் எடுத்துரைத்தார்.  

ஆனால் தமிழகத்தில் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தாமல் பீக் ஹவர் மின்சார பயன்பாடு கணக்கிடப்படுகிறது. பீக் ஹவர்களில் மில்களை ஓட்டாத தொழில் நிறுவனங்களுக்கும் 25 சதவீத பீக் ஹவர் கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மின்சார கட்டணத்தை 15 சதவீதம் உயர்த்தி, பீக் ஹவர் நேரத்தையும் உயர்த்தியதால் தொழில் நிறுவனங்கள் தற்போது மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஸ்மார்ட் மீட்டர்களை பொறுத்த மத்திய அரசு வழங்கிய மானியம் என்ன ஆனது என்பதை தமிழக அரசு விளக்க வேண்டும்.   
 
600 ஓப்பன் எண்ட் மில்களில், 280 மில்கள் இரண்டாவது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. மேலும் 290 மில்கள், வரும் திங்கள் கிழமை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருக்கின்றன. பெருமளவில், தொழில் முடக்கமும், பொருளாதார முடக்கமும் ஏற்படும் அபாயம் நிலவுகிறது. ஆனால், முதலமைச்சரும், மற்ற அமைச்சர்களும் இது குறித்து எந்தக் கவலையுமின்றி, திரைப்படங்கள் பார்ப்பதும், அதற்கு விமர்சனங்கள் எழுதுவதில் மும்முரமாக இருக்கின்றனர்.

புதிய தொழில் நிறுவனங்கள் தொடங்க தமிழ்நாட்டில் யாரும் முன்வராததால், துபாய், சிங்கப்பூர் ஜப்பான் என சுற்றுலா சென்று ஷூட்டிங் நடத்தி மக்களை ஏமாற்றி வரும் முதலமைச்சர், ஆட்சி நடத்துவதை, பொழுதுபோக்காகக் கருதாமல், பொதுமக்களுக்குச் செய்ய வேண்டிய பணியாகக் கருத வேண்டும் என்றும், உடனடியாக ஓப்பன் எண்ட் ஸ்பின்னிங் மில்களுக்கு விற்கப்படும் பருத்தி பேல்களின் விலையைக் குறைக்க நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்றும், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மில் உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, யாரும் பாதிக்கப்படாதவாறு நல்லதொரு தீர்வு எட்ட, உடனடியாக முயற்சி செய்ய வேண்டும் என்றும், தமிழக பாஜக சார்பில் வலியுறுத்துகிறேன்", எனக் கூறினார்.

இதையும் படிக்க | ஓபி. ரவீந்திரநாத் வழக்கு: மேல்முறையீட்டுக்காக 30 நாட்கள் தீர்ப்பு ஒத்திவைப்பு...!