மயிலாடுதுறையில் கனமழை... சாலையோர வியாபாரம் பாதிப்பு...

மயிலாடுதுறை மாவட்டத்தில் மாலையில் இருந்து இடியுடன் கூடிய மிக கனமழை , தெருவோர கடைகளின் வியாபாரம் முடங்கிப் போனதால் வியாபாரிகள் வேதனை.

மயிலாடுதுறையில் கனமழை... சாலையோர வியாபாரம் பாதிப்பு...

வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒரு வாரமாக அவ்வப்போது கனமழை பெய்து வருகின்றது. இந்நிலையில் அடுத்த சில நாட்களுக்கு மிக கனமழை இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில், நேற்று காலை முதல் மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் மழை தணிந்து இருந்தது.

இந்நிலையில் நேற்று மாலை மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான குத்தாலம் , தரங்கம்பாடி , சீர்காழி, கொள்ளிடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழையானது பெய்ய தொடங்கியது. தொடர்ந்து ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையின் காரணமாக வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.

தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி இருந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில் தெருவோர வியாபாரிகளின் விற்பனை முழுவதுமாக முடங்கிப் போய் உள்ளதால் வேதனை அடைந்துள்ளனர்.