இனி தனியார் கட்டடங்களை இடிப்பதற்கு...கள ஆய்வு செய்து ஒப்புதல் வழங்குவது கட்டாயம்...!

இனி தனியார் கட்டடங்களை இடிப்பதற்கு...கள ஆய்வு செய்து ஒப்புதல் வழங்குவது கட்டாயம்...!

சென்னையில் தனியார் கட்டிடங்களை இடிக்க வேண்டுமெனில் மாநகராட்சி பொறியாளர் பாதுகாப்பு ஏற்பாடுகளை கள ஆய்வு செய்து ஒப்புதல் வழங்குவது கட்டாயம் என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. 


சென்னை அண்ணாசாலை ஆயிரம் விளக்குப் பகுதியில் பயன்படுத்தப்படாத கட்டிடத்தை இடிக்கும் பணியின் போது, சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பிரியா என்ற பெண் மீது கட்டிட இடுபாடுகள் விழுந்து, சிகிச்சைப் பலனின்றி பிரியா உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக மாமன்றக் கூட்டத்தில் விளக்கமளித்த மேயர் பிரியா, இனிவரும் காலங்களில் கட்டிடம் இடிக்கும் போது மாநகராட்சி அதிகாரிகள் பணிகளை நேரில் ஆய்வு செய்வார்கள் என்று தெரிவித்தார்.  மேலும் இது தொடர்பான, புதிய வழிகாட்டு நெறிமுறைகளை சுற்றறிக்கையாக மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி அனைத்து பொறியியல் துறை அதிகாரிகளுக்கும் அனுப்பி உள்ளதாகவும் தெரிவித்தார். 

இதையும் படிக்க : கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம்...தமிழக அரசின் முன்னெடுப்பை வரவேற்பதாக விர்சா பெர்கின்ஸ் பேச்சு!
 
சென்னை மாநகராட்சி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், கட்டிடம் இடிக்கும் பணியை தொடங்குவதற்கு முன்பே பாதுகாப்பு ஏற்பாடுகளை உரிமையாளர்கள் செய்ய வேண்டும் என்றும், பேரிகார்டுகள், அறிவிப்பு பலகைகள், எச்சரிக்கை வாசகங்கள் போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகளை முறையாக செய்திருக்க இருக்க வேண்டும் என்றும், இந்தப் பாதுகாப்பு பணிகளை முடித்த பிறகு கட்டிடத்தின் உரிமையாளர்கள் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தெரிக்க வேண்டும் என்றும், அதன்படி, அடுத்த 3 நாட்களுக்குள் மாநகராட்சி உதவி பொறியாளர்கள் நேரில் சென்று பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ளதா, அருகே உள்ள கட்டடங்கள் சேதம் அடையாதவாறு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும், முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தால் கட்டிடம் இடிக்கும் பணியை தொடங்க அனுமதி அளிக்க வேண்டும்  எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கட்டிடம் இடிப்பதற்கு உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் பணிகளை தொடங்கினால் உரிமையாளர்கள் மீதும், கள ஆய்வு மேற்கொள்ளாமல் அனுமதி அளித்தால் மாநகராட்சி பொறியாளர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.